திருவாரூர்: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில கல்விக் கொள்கை இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 3,5 மற்றும் 8ம் வகுப்பில் படித்து வரும் மாணவர்களுக்கு மாநில அடைவு தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஒவ்வொரு மாவட்டமாக நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கொரடாச்சேரி, கோட்டூர் மற்றும் நன்னிலம் ஒன்றியங்களை சேர்ந்த தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காலி பணியிடம் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்பதில் முதல்வர் மிகுந்த அக்கறையுடன் இருந்து வருகிறார். அந்த வகையில் ஆசிரியர்கள் காலி பணியிடம் விரைவில் நிரப்பப்படும். இதேபோல் டெட் தேர்வும் மிக விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நடத்தப்படும். சமக்ர சிgfஷா அபியான் திட்டத்தில் ஒன்றிய அரசின் கொள்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாததால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடியினை ஒன்றிய அரசு இதுவரையில் விடுவிக்கவில்லை. ஆனால் தமிழக அரசு சார்பில் முதல் தவணை விடுவிக்கப்பட்டுள்ளது.
2025- 26 ம் ஆண்டிற்கும் வழங்க வேண்டிய ரூ. ஆயிரத்து 800 கோடி தொகை வழங்கப்படவில்லை. மாநில அரசின் கல்விக் கொள்கையானது பள்ளிக் கல்வித்துறையும், உயர்கல்வி துறையும் இணைந்ததாகும். இதில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில கல்விக் கொள்கை இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.