திருச்சி: ஒன்றிய அரசு கல்விக்கொள்கையை விட மாநில கல்விக்கொள்கைதான் சிறந்தது, வேண்டுமானால் ஆளுநர் ஒரு கமிட்டி போட்டு ஆய்வு செய்துவிட்டு பேசுங்கள் என்று ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சவால் விடுத்துள்ளார். திருச்சி தேசிய கல்லூரி மைதானத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் ஆய்வக உதவியாளருக்கான பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் பயிற்சி ைகயேடு வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பயிற்சி சான்றிதழ் வழங்கியதுடன் பயிற்சி ைகயேட்டை வெளியிட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், பள்ளிகளுக்கு ஸ்டெப் லேப் கொண்டு வந்தோம். பள்ளி என்பது எங்கள் வீடு, பள்ளிக்கூடம் என்பது எங்கள் வாழ்வு என ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். அதேபோல் ஆய்வகத்தில் பணிபுரிபவர்கள் மனதில் வைத்து பணிபுரிய வேண்டும். அடுத்த தலைமுறையினரை உருவாக்கக்கூடிய பங்கு உங்களிடம் தான் உள்ளது. வருங்காலத்தில் ஒரு கமிட்டி அமைத்து கோரிக்கைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்ற முடியுமோ அந்த அளவுக்கு நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் என்றார்.
தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி: ஒன்றிய அரசு நிதி வழங்காதது குறித்து ஏற்கனவே பல விவாதங்கள் போய் கொண்டிருக்கிறது. தலைமை செயலாளர் எழுதிய கடிதத்தில் முதலில் எங்களுக்கான தவணைத்தொகையை வழங்குங்கள். நாங்கள் கேட்பது சமக்ரா சிக்ஸா திட்டத்தின்கீழ். பிஎம் திட்டத்தின்கீழ், தரமான கல்வியை வழங்க வேண்டிய அதே வேளையில் புதிய கல்விக் கொள்கையை புகுத்த வேண்டும் என்பதை எங்களால் ஏற்று கொள்ள முடியாது. எனவே நாங்கள் கமிட்டி அமைத்து, அந்த கமிட்டி பரிந்துரை செய்வதை பொருத்தே முடிவெடுப்போம் என்று தெளிவாக சொல்லி விட்டோம். எங்களது கமிட்டி அதை ஒத்து கொள்ளவில்லையென ஒன்றிய அமைச்சரிடம் சொல்லி விட்டு அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான பணத்தை கொடுங்கள் என சொன்னோமே தவிர, எந்த காலத்திலும் மாநில கொள்கையை விட்டு கொடுத்து ஒன்றிய அரசிடம் நிதியை பெறமாட்டோம்.
மாநில கல்விக்கொள்கையை விட ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை நன்றாக இருக்கிறது என்று ஆளுநர் ரவி கூறியிருக்கிறார். மாநில புத்தகத்தை படிப்பதன் மூலமாக போட்டி தேர்வுகளில் எவ்வளவு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், எவ்வளவு பேர் அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளனர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கடந்து நமது பாடத்திட்டம் எப்படி உள்ளது என்பதை ஆளுநர் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு கமிட்டி போட்டு ஆய்வு செய்து பேசட்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசின் போட்டி தேர்வுகளில் நமது மாநில பாடப்புத்தகத்தில் இருந்து தான் அதிக கேள்விகள் கேட்கப்படுகிறது. மாநில புத்தகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் நூலகங்களில் தயார் செய்து வருகின்றனர். வேண்டுமானால் ஆளுநர் ஒரு நாள் நூலகத்துக்கு என்னுடன் ஆய்வுக்கு வரட்டும். அதன் பின்பு ஆளுநர் சொல்லட்டும். இவ்வாறு அவர் கூறினார்.