புதுடெல்லி: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதும் 56 மாநில கல்வி வாரியங்கள், 3 தேசிய கல்வி வாரியங்கள் உட்பட 59 பள்ளி வாரியங்களின் பொதுத்தேர்வு முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 10ம் வகுப்பில் 33.5 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களில் 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. 28 லட்சம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். உயர்நிலை வகுப்பில் மாணவர் தக்க வைப்பு விகிதம் மற்றும் மொத்த சேர்க்கை விகிதம் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். 12ம் வகுப்பில் 32.4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
இதில் 5.2 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. 27.2 லட்சம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். 10ம் வகுப்பில் மத்திய கல்வி வாரியத்தில் தோல்வி விகிதம் 6 சதவீதமாகவும், மாநில வாரியத்தில் 16 சதவீதமாகவும், 12ம் வகுப்பில் மத்திய கல்வி வாரியத்தில் தோல்வி விகிதம் 12 சதவீதமாகவும், மாநில வாரியத்தில் 18 சதவீதமாகவும் உள்ளன. 10ம் வகுப்பை பொறுத்த வரையில் அதிக மாணவர்கள் தோல்வி அடைந்த மாநிலங்கள் வரிசையில் மபி, பீகார், உபி முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. 12ம் வகுப்பில் உபி, மபி முதல் 2 இடங்களில் உள்ளன. அரசு பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் பங்கேற்றுள்னர் என்றார்.