புதுடெல்லி: மாநில தனிநபர் வருவாய் கணக்கெடுப்பின்படி மது அருந்துவதில் தெலங்கானா மக்கள் முதலிடத்தில் உள்ளனர் என்று தேசிய பொது நிதி மற்றும் கொள்கையின் ஆய்வறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் மதுவிலக்கு தடை சட்டம் அமலில் இருந்தாலும் கூட, அங்கும் கள்ளச் சாராய விற்பனையும் நடந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக மது அருந்துகிறார்கள்? எந்த மாநில மக்கள் அதிகமாக மது அருந்துவதற்காக பணம் செலவழிக்கிறார்கள்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஒன்றிய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கையின் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநில மக்கள் மதுவுக்காக அதிகளவில் பணத்தை செலவிடுகிறார்கள். அதன் பிறகு சட்டீஸ்கர், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநில மக்கள் அதிகளவில் மதுவிற்காக பணம் செலவழிக்கின்றனர்.
அதேபோல் மற்ற மாநில மக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த ஆய்வானது மதுவிற்கு விதிக்கப்படும் வரி வருவாய் வசூல் செய்வதில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் மாநிலம் வாரியாக ஆண்டுக்கு தனிநபர் வருவாயில் மதுவிற்காக செலவு செய்யும் ரொக்க விபரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. கடந்த 2011-12ம் ஆண்டு முதல் 2022-23ம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட ஆய்வில், 2011-12ம் ஆண்டிற்கான புள்ளி விபரத்தின்படி மதுபானத்திற்காக அதிக செலவு செய்யும் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் இருந்தது. 2022-23ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ெதலங்கானா மாநிலம் முதலிடத்திற்கு வந்துள்ளது.