சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவில் பொறியியல் மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டி நடத்தப்படும் என்று திமுக பொறியாளர் அணி செயலாளர் எஸ்.கே.பி.கருணாநிதி அறிவித்துள்ளார். திமுக பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் எஸ்.கே.பி. கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தொழில் துறை மற்றும் பொறியியல் துறை வளர்ச்சிக்கு வித்திட்டவர் கலைஞர். அவரது ஆட்சியில் தொழில் துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தது.
அதேபோல, தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், தமிழக தொழில் துறை உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக, பொறியாளர்களின் பங்களிப்புடன் சர்வதேச அளவில் தமிழகம் தொழில் துறையில் முன்னிலை வகிக்கிறது. தற்போது தமிழ்நாடு முழுவதும் கலைஞரின் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, திமுக பொறியாளர் அணி சார்பில் மாபெரும் பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது. இதில், இளங்கலை-முதுகலை பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றங்களிலும் தொகுதி வாரியாக முதல் கட்டப் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, முதல் 3 இடங்களை வெல்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாவது பரிசாக ரூ.5,000, மூன்றாவது பரிசாக ரூ.3,000 மற்றும் கேடயம்-சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். மேலும், சட்டமன்ற அளவில் தேர்ச்சி பெறுவோர், மண்டல அளவிலான பேச்சு போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மண்டல அளவிலான போட்டியிலும் 3 இடங்களை வெல்வோருக்கு கேடயம், ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மண்டல அளவிலான போட்டியில் தேர்ச்சி பெறுவோர், மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்பர். அந்தப் போட்டியில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், சுழற்கோப்பையும் வழங்கப்படும். அடுத்தடுத்த இடங்களைப் பிடிப்பவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. ‘தொழில்நுட்பக் கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர்’, ‘தொழில் துறையை உயர்த்திய தமிழின தலைவர்’, ‘திராவிட மாடலும், திறன்மிக்க கல்வியும்’, ‘தெற்குச் சூரியன்’, ‘கலைஞரும் தமிழும்’ ஆகிய தலைப்புகளில் ஏதாவது ஒன்றில், அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை மாணவர்கள் பேசலாம்,
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், திமுக, பொறியாளர் அணி வெளியிட்டுள்ள க்யூ.ஆர். கோடினை ஸ்கேன் செய்தோ, dmkenggwing@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். சட்டமன்ற அளவில் போட்டி நடைபெறும் நாள், நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள், முன்பதிவு செய்துகொண்ட போட்டியாளர்களுக்குஅந்தந்தத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.dmkengwing.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.