சென்னை: மாநில பாடத்திட்டம் தொடர்பான ஆளுநரின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள கே.டி.சி.டி.பெண்கள் மேல்நிலை பள்ளியின் நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது. நுாற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, கவர்னர் ரவி பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடும் போது, மாநில பாடத்திட்டம் தரம் குறைவாக உள்ளது பல்வேறு கல்லுாரிகளுக்கு சென்ற நான், அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினேன்.
அவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு, ‘ரோபோட்டிக்ஸ்’ போன்றவை பற்றிய பார்வை, அறிவுத் திறன் குறைவாக உள்ளது. என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளுநரின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டின் ஆளுநர் கடந்த காலங்களில் புதியக் கல்விக் கொள்கையை பற்றி அனைத்து மேடைகளிலும் பேசி வந்தார்.
ஆனால், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்று உறுதியாகத் தெரிந்தவுடன், மாநில கல்விக் கொள்கை மீது அவதூறையும், சேற்றையும் வீசத் தொடங்கியுள்ளார். இத்தனை ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்தவர், மாநில கல்விக் கொள்கை பற்றி கருத்துக் கூறாமல் தற்போது தரம் தாழ்ந்து விமர்சிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு பி.ஆர்.ஓ.போல் செயல்படுவதை விட்டுவிட்டு தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையைப் பற்றிய தன்னுடைய கருத்துக்கு ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.