Tuesday, June 17, 2025
Home செய்திகள்Banner News மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

by MuthuKumar

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (9.6.2025) தலைமைச் செயலகத்தில், துணை முதலமைச்சர் மற்றும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 1) தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள் 2) நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030-தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம் 3) தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ் (வாகன உற்பத்தி) துறையின் எதிர்காலம் 4) அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி – தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை ஆகிய நான்கு அறிக்கைகளை சமர்ப்பித்தார்.

மாநில திட்டக் குழுவானது முதலமைச்சர் தலைமையில் செயல்படும் ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவாகும். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி மக்கள் நல திட்டங்களை மதிப்பீட்டு ஆய்வு செய்வதிலும், அரசு ஆளுகையில் எழும் புதிய தேவைகளுக்கேற்ப கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், பல்வேறு ஆய்வுகள் நடத்தி அறிக்கை தயாரிப்பதிலும் தனது பங்களிப்பை மாநில திட்டக் குழு நல்கி வருகிறது.

முதலமைச்சரிடம் சமர்பித்த அறிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:

1. தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள்
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வேளாண் சாரா பணிகளில் தன்மை மற்றும் அளவினை அறிந்து கொள்ளும் முக்கிய நோக்கத்துடன் வேளாண் சாரா வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு மாநிலத் திட்டக் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தமிழ்நாட்டின் அதிக வேளாண் சாராத பணிகளைக் கொண்டுள்ள மாவட்டங்கள் மற்றும் குறைந்த அளவு வேளாண் சாராத பணிகளைக் கொண்டுள்ள ஆறு மாவட்டங்களிலுள்ள 12 தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், வேளாண் பணிகளிலிருந்து, அதிகளவில் வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது. கட்டடம் மற்றும் உற்பத்தி துறைகள் போன்ற வேளாண்மை சாராத துறைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது 75%-க்கும் அதிகமான ஆண் தொழிலாளர்கள் மற்றும் 50%-க்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் வேளாண்மை அல்லாத துறைகளில் வேலை செய்யும் நிலை உள்ளது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

இது 2012-க்குப் பிறகு வேளாண்மைத் துறையின் சதவீதத்தில், 20% குறைந்துள்ளது என்பதையும் குறிக்கிறது. இது ஊரக வாழ்வாதாரத்தில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றத்தைக் காட்டுகிறது. இந்த ஆய்வின்படி, 15 முதல் 34 வயதுக்குட்பட்ட இளம் தொழிலாளர்களே இந்த மாற்றத்தின் முக்கிய காரணியாக இருந்து வருகிறார்கள் எனத் தெரியவருகிறது. அதிக ஊதியமும் நிலையான வேலைவாய்ப்புகளும் இளைஞர்களை வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகளுக்கு ஈர்த்துள்ளன. கட்டடத் தொழில் இளைஞர்களிடையே, முதன்மையான துறையாகவும், பெண்களிடையே உற்பத்தித்துறை முக்கிய வேலைவாய்ப்பு துறையாகவும் உருவெடுத்துள்ளது.

2. நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030- “நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம்”
“நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம்” தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் சார்பில், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, 2030-ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி திட்டமான நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ் உள்ள 17 இலக்குகள் வாரியாக அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. மேலும், இந்த ஆவணம் பல்வேறு இலக்குகளில் மாநிலத்தின் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்டங்கள், சிறப்பு முயற்சிகள் மற்றும் கொள்கை உருவாக்கங்கள் மூலம் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆவணம், ஒவ்வொரு இலக்கினை அடைவதற்கான உத்திகள் மற்றும் செயல் திட்டங்களையும் கொண்டுள்ளது.

3. தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ் ( வாகன உற்பத்தி) துறையின் எதிர்காலம்
மாநில திட்டக் குழு, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் (Guidance Tamil Nadu), ஆட்டோ கார் நிறுவனத்தின் நிபுணத்துவத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட “தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ் (வாகன உற்பத்தி) துறையின் எதிர்காலம்” என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தமிழகத்தின் வாகன உற்பத்தி துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியை விவரிக்கிறது. வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, காலநிலைக்கு ஏற்ப மற்றும் நிலைத்த தன்மையுடன் கூடிய வலுவான அடித்தளத்தை உருவாக்க உள்ளது என்று இவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனம், கலப்பினம் (Hybrid), ஹைட்ரஜன், சிஎன்ஜி (CNG) மற்றும் டீசல் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர்மயமாக்கலை ஊக்குவித்தல் மற்றும் அரசின் கொள்கை வடிவமைப்பை வலுப்படுத்தலும் முக்கிய பரிந்துரைகளாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மின் வாகன உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருப்பதால், 2030 ஆம் ஆண்டுக்குள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு மின் வாகனம் அமைப்புகள், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றில் திறன்களை மேம்படுத்துவதன் அவசியத்தையும் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது. இவ்வறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகளில், மின்னணு வாகனக் குழுக்கள் (EV Clusters) அமைத்தல், ரோல் ஆன் ரோல் ஆஃப் (RORO) துறைமுகங்கள் மற்றும் பன்முக போக்குவரத்து மையங்களை மேம்படுத்தல், திறன் பூங்காக்கள் வழியாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை விரிவுப்படுத்துதல் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொலைநோக்கு திட்டமான 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை அடையவும் காலநிலைக்கு உகந்த மற்றும் புதுமைக்கான மையமாகவும் தமிழ்நாட்டை மாற்றிட இந்த அறிக்கை வழிவகை செய்கிறது.

4. தமிழ்நாட்டை அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி – வடிவமைக்கும் பாதை
மாநில திட்டக் குழு மற்றும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் (Guidance Tamil Nadu), பிசினஸ் ஸ்டாண்டர்டுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட “தமிழ்நாட்டை அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி – வடிவமைக்கும் பாதை” என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கை, 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதாரமாக மாற்றும் தொலைநோக்கு திட்டத்தை முன்வைக்கிறது.

உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) மற்றும் உற்பத்தித் துறையின் எதிர்காலம் ஆகிய இரு துறைகளிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை இவ்வறிக்கையில் தெளிவாக விளக்கப்படுகிறது. தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் நிலைத்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு உற்பத்தித் துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்க இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது. குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையை வலுப்படுத்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இவ்வறிக்கை, அனைவருக்கும் பயனளிக்கும் ஒருங்கிணைந்த மற்றும் செம்மையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி, சமூகநீதி மற்றும் அறிவுசார் பரிணாமத்தை ஒருங்கிணைக்கும் விரிவான செயல்திட்டமாக இவ்வறிக்கை அமைந்துள்ளது.

இந்த நிகழ்வின்போது, மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளர் த..உதயச்சந்திரன், இ.ஆ.ப., மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் செயலர் சுதா எஸ். இ.வ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi