புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “கடந்த 22ம் தேதி இரவு முதலே பஹல்காம் தாக்குதல் மற்றும் அதன் விளைவுகள் பற்றி பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
மே 10ம் தேதி மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் இணைந்து, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதன் மூலம் நாட்டின் கூட்டு உறுதியை காட்ட வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதையும் பிரதமர் ஏற்கவில்லை.
தற்போது அவசரநிலை பிரகடனத்தின் 50வது ஆண்டின் நிறைவு நாளான ஜூன் 25-26ம் தேதிகளில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த ஒன்றிய அரசு பரிசீலிப்பதாக தெரிகிறது. நாடு தற்போது சந்திக்கும் பிரச்னைகளை விவாதிக்காமல் 50 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது என்பதை விவாதிக்க மோடி அரசு விரும்புகிறது. இது கடந்த 11 ஆண்டுகளாக அவசரநிலையின்கீழ் நாட்டை வைத்துள்ள ஒன்றிய பாஜ அரசின் பிரச்னைகளிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பும் பிரதமர் மோடியின் முயற்சி.
பாகிஸ்தானையும், தீவிரவாதிகளையும் தாக்குவதற்கு பதிலாக காங்கிரசை குறி வைத்து தாக்குவதையே மோடி அரசு விரும்புகிறது” என குற்றம்சாட்டி உள்ளார்.