டெல்லி: மாநில மொழிகளுக்கு இந்தி மொழி போட்டியல்ல என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் அலுவல் மொழிக்கான பார்லிமென்ட் குழுவின், 38வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், பா.ஜ., மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:
உலகளவில் ஹிந்தி மற்றும் நாட்டின் அனைத்து மொழிகளையும் பிரதமர் நரேந்திர மோடி பிரபலப்படுத்தி வருகிறார்.
மாநில மொழிகளுக்கு இந்தி மொழி போட்டியல்ல. அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதன் வாயிலாகவே, நாடு அதிகாரம் பெறும். தமிழ், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளுக்கு போட்டியாக இந்தி மொழி கொண்டுவருவதாக கூறுவது தவறு. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் நாடு வலிமை பெறும். எந்தவித எதிர்ப்பும் இன்றி அலுவல் மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ளுவதற்கான தேவையை உருவாக்க வேண்டும். இந்தியை ஏற்பதில் தயக்கம் இருந்தாலும் இறுதியில் எந்த எதிர்ப்புமின்றி இந்தி ஏற்றுக் கொள்ளப்படும். பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை, 10 மொழிகளில் துவங்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது. விரைவில் இந்தப் படிப்புகள் நாட்டின் அனைத்து மொழிகளிலும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.