சென்னை: மாநில தலைவர் அண்ணாமலை வருவதற்கு முன்பாக பாஜக மாவட்ட தலைவர், மாநில நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அதிமுக ஊழல்கள் குறித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலுக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுக்கலாம் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்தது. தமிழகத்திலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்றது. இந்த கூட்டணி இணைந்து கடந்த நாடாளுமன்ற தேர்தல், அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை சந்தித்தது.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், பாஜ தலைவர் அண்ணாமலைக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி ஆரம்பமானது. அதன் பிறகு இரு அணி தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தனர். இதனால், இந்த கூட்டணி வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் வரை தொடருமா? என்ற சூழ்நிலை உருவானது. இதன் உச்சக்கட்டமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்று அண்ணாமலை பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேரறிஞர் அண்ணா பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்தார். இதனால், அதிமுகவினர் கொதித்து போயினர். இப்படி அண்ணாமலை கூறுவதை எல்லாம் கேட்டு கொண்டு கூட்டணியை தொடருவதா? என்று அதிமுக தலைவர்கள் கூற தொடங்கினர். இந்த நிலையில் கடந்த 25ம் தேதி நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. தமிழகத்திலும் அதிமுக கூட்டணியில் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். கூட்டணி முறிவை இரண்டு அணி தலைவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதே நேரத்தில் கூட்டணி முறிவு குறித்து பாஜக தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. கூட்டணி முறிவு குறித்து டெல்லி மேலிடம் அறிவிக்கும் என்று மட்டும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வந்தார். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லிக்கு வருமாறு அண்ணாமலைக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லி சென்ற அண்ணாமலை அமித்ஷா, ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ், நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது டெல்லி தலைவர்கள் அண்ணாமலையை கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் வரை அதிமுக குறித்தும், அதிமுக தலைவர்கள் குறித்தும் பேச வேண்டாம் என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் அண்ணாமலை இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதனால் 6ம் தேதி(நாளை) நடைபெற இருந்த அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை வருகிற 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பாஜக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்கியது.இந்த கூட்டத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், மூத்த தலைவர் எச்.ராஜா, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், துணை தலைவர் கரு.நாகராஜன், சக்ரவர்த்தி, பொது செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், அணி தலைவர், மாவட்ட பார்வையாளர்கள் என 221 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை வரவில்லை. அவர் இல்லாமல் காலை 10.30 மணிக்கு கூட்டத்தை அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் தொடங்கி வைத்தார். வந்தே பாரதம் பாடல் பாடி கூட்டம் தொடங்கியது. சிறிது நேரத்திற்கு பிறகு கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டத்தில் அதிமுக உடனான கூட்டணி முறிந்த நிலையில் முதல் முறையாக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாஜகவின் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது விவாதிக்கப்பட்டது.அதிமுக கூட்டணி முறிவு குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அதிமுக தலைவர்களின் ஊழல்கள் குறித்து எதுவும் பேசக் கூடாது. 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுக்கலாம். அப்போது தேவைப்பட்டால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டியது வரும். அதுவரை பொறுமை காக்கவும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.