சென்னை: தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பு தலைவர் சேம.நாராயணன் வெளியிட்ட அறிக்கை:
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சாதி மக்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசே இடஒதுக்கீட்டை எடுத்து சமூகநீதி அடிப்படையில் வழங்க வழிவகுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். இதற்காக இந்தியாவிலுள்ள தலைவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து கருத்தரங்குகள் நடத்தி வருகிறார். இது உள்ளபடியே விளிம்புநிலை மக்களின் எதிர்காலத்திற்கு பெரும் துணை நிற்கும்.
எனவே சமூகநீதியின் கதாநாயகனாக திகழும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பீகார் அரசை பின்பற்றி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எடுத்து வெளியிட வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எத்தனையோ சாதனைகள் செய்துள்ளார். இவை அத்தனைக்கும் சிகரம் வைப்பது போல் இந்த கணக்கெடுப்பு அமையும். வரலாறு உள்ளவரை நம்முடைய முதல்வரின் வரலாறும் இருக்கும் என்று 4 கோடி மிகவும் பிற்படுத்தப்பட்டோ மக்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுளார்.