சென்னை: மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்பிலான 780 நட்சத்திர ஆமைகள், மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்பு இ-சிகரெட்கள் என மொத்தம் ரூ.52 லட்சம் மதிப்புடைய கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் பயணிகள் 4 பேரிடம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் புறப்பட தயாராகிக்கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடமைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக்கொண்டு இருந்தனர்.
அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் (36), யூசுப் (35), அஸ்ரப் (40) ஆகிய 3 பேர், சுற்றுலாப் பயணிகளாக இந்த விமானத்தில் மலேசியா செல்ல வந்திருந்தனர். அவர்கள் பெரிய அட்டைப் பெட்டிகள் வைத்திருந்தனர். அட்டைப் பெட்டிகளில் என்ன இருக்கிறது என்று கேட்டதற்கு, அரிசி, சமையல் பொருட்கள் இருக்கிறது என்று கூறினர்.ஆனால் அந்த அட்டைப் பெட்டிகள் சோதனை நடந்து கொண்டிருக்கும் போதே லேசாக அசைந்தன. இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அட்டைப் பெட்டிகளை திறந்து பார்த்தபோது, உயிருடன் கூடிய நட்சத்திர ஆமைகள் 780 இருந்ததை கண்டுபிடித்தனர்.இதையடுத்து 3 பேர் பயணங்களையும் ரத்து செய்த பாதுகாப்பு அதிகாரிகள், 3 பேரையும், அவர்கள் வைத்திருந்த நட்சத்திர ஆமைகளையும், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள், இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து 3 பேர் ைவத்திருந்த 780 நட்சத்திர ஆமைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில், சதுப்பு நிலப்பகுதிகளில் இருந்து நட்சத்திர ஆமைகளை பிடித்து வந்து, மலேசியாவுக்கு கடத்திச் செல்வதாகவும், இந்த நட்சத்திர ஆமைகளின் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம் என்றும் தெரிய வந்தது.மேலும், பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை கிண்டி சிறுவர் பூங்கா அல்லது வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க சுங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையே, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணியின் உடமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,500 இ-சிகரெட்களை பறிமுதல் செய்தனர். அந்த இ-சிகரெட்களின் சர்வதேச மதிப்பு ரூ.37 லட்சம் என கூறப்படுகிறது.இதையடுத்து, இ- சிகரெட்களை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கடத்தல் பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புடைய நட்சத்திர ஆமைகள், மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்புடைய இ-சிகரெட்டுகள், மொத்தம் ரூ.52 லட்சம் மதிப்புடைய கடத்தல் பொருட்கள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.