Saturday, April 20, 2024
Home » தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சி கவர்னருக்கு மட்டும் தெரியவில்லை: தினம்தோறும் மக்களை குழப்பும் வேலையை செய்கிறார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சி கவர்னருக்கு மட்டும் தெரியவில்லை: தினம்தோறும் மக்களை குழப்பும் வேலையை செய்கிறார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

by Karthik Yash
Published: Last Updated on

சென்னை: கல்வியிலும் மக்கள் நலன் பேணுவதிலும் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. மாநிலத்தின் இந்த வளர்ச்சி, மாநிலத்திலே மிக பெரிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவருக்கு மட்டும் புலப்படவில்லை. விமர்சனம் என்ற பெயரில் தினமும் ஏதாவது ஒரு செய்தியை சொல்லி மக்களை குழப்புகிறார். ஆனால் இதையெல்லாம் மக்கள் தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற விழாவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டையும் திராவிட மாடல் அரசு இரண்டு கண்களாக நினைத்துப் போற்றி வருகிறது. அதனை செயல்படுத்தியும் வருகிறோம். கல்வியில் சிறந்த தமிழ்நாடாகவும் மக்கள் நலம் பேணுவதில் மிகச் சிறந்த தமிழ்நாடாகவும் நம்முடைய மாநிலம் இன்றைக்கு தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆனால் இப்படி தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சி, மாநிலத்திலே மிக பெரிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவருக்கு மட்டும் அது புலப்படவில்லை. அந்தவகையில், அவர் திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்த கருத்துக்களை எல்லாம் விமர்சனங்களாக்கி தொடர்ந்து தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியை மக்களை குழப்பக்கூடிய வகையிலே செய்து கொண்டிருக்கிறார். இதனை பற்றியெல்லாம் மக்கள் கொஞ்சம்கூட கவலைப்பட மாட்டார்கள்.

அதையெல்லாம் மக்கள் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து அப்படி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கு ஒரு எழுச்சி ஏற்படும். மக்களும் தெளிவாக புரிந்து கொள்வார்கள். புதிய ஆட்சி வந்தபிறகு நான் முதல்வராக மற்றவர்கள் எல்லாம் துறையின் அமைச்சர்களாக பொறுப்பேற்று இருந்தாலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அமைச்சராக இருந்தவர் மா.சு.தான். ஆனால் மா.சுப்பிரமணியம் மட்டுமல்ல, முதல்வர் உட்பட எல்லா அமைச்சர்களும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக மாறினோம்.

அதனால் தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியிலே ஒரு பெரிய வெற்றியை பெற்றோம். இந்திய அளவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் முதல் மூன்று மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு உள்ளது. பொதுவாக ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான குறியீடுகளில் ஒன்றாக மக்கள் நல்வாழ்வு விளங்கி வருவதுடன் தனிநபருக்கான சிகிச்சை செலவுகள் குறைவாக இருப்பதும் நம் மாநிலத்தின் மருத்துவத் துறையின் சிறப்பினை வெளிப்படுத்துகிறது.
அந்த அடிப்படையில் தான் கடந்த 2021 ஆகஸ்ட் 5ம் தேதி ‘‘மக்களைத் தேடி மருத்துவம்’’ என்ற மகத்தான திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.

தொடர்ந்து மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 51 ஆயிரத்து 661 பயனாளிகளுக்கு முதன்முறை சேவைகளும், 3 கோடியே 4 லட்சத்து 71 ஆயிரத்து 896 நபர்களுக்கு தொடர் சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியாவிற்கே முன்னோடியான இந்த திட்டத்தைப் புகழ்ந்து உலக சுகாதார அமைப்பே தனது வலைத்தளத்தில் ஒரு பாராட்டு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. பயனாளிகளுக்கு அவர்கள் வீட்டை விட்டே வெளியே வர தேவையில்லாமல், மருத்துவப் பணியாளர்கள் பரிசோதனை மேற்கொள்வது, நோய்க் கண்டறிவது, சிகிச்சை தருவது, மருந்துகளைத் தருவது பற்றி எழுதப்பட்டுள்ளது. அதனை தயவுசெய்து குறை சொல்கின்ற அவர் படித்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதிலும், பெண் மருத்துவப் பணியாளர்கள் எப்படி இந்தத் திட்டத்தின் முதுகெலும்பாகச் செயல்படுகிறார்கள் என்பது பற்றியும் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள். உலக அமைப்பே பாராட்டும் வகையில் நாம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை அனைவரும் போற்றுகிறார்கள். நான் அண்மையில் ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்றேன். அதைக்கூட இங்கே இருக்கக்கூடிய எதிர்கட்சித் தலைவர் எப்படி விமர்சித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். முதலீட்டை ஈர்க்க போகவில்லை, முதலீடு செய்யப் போயிருக்கிறார் என்று சொல்கிறார் இது அவர் புத்தி.

எனவே, அதைப்பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. ‘இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின்கீழ் சாலை விபத்துக்குள்ளானவர்கள் எந்த மாநிலத்தவர்களாக இருந்தாலும், தமிழ்நாடு மட்டுமல்ல எந்த மாநிலத்தவராக இருந்தாலும் 48 மணி நேரத்திற்குள் அவசர அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படும் ஒரு மாநிலம் இருக்கிறது என்றால் அது தமிழ்நாடு தான். கடந்த 2021 டிசம்பர் 18ம் தேதி முதல் இந்தாண்டு மே 31ம் தேதி வரை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 1 லட்சத்து 65 ஆயிரத்து 355 பேர் இந்த திட்டத்தின் கீழ், ரூ.145 கோடியே 27 லட்சம் செலவில் சிகிச்சை பெற்று இன்னுயிர் மீட்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு மருத்துவமனை மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி அதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நல்வாழ்வுத்துறையானது மாரத்தான் ஓட்டம் போல மிகப் பெரிய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. அந்தவரிசையில், இன்னொரு மகத்தான திட்டமாக நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே, தமிழ்நாட்டில் கிராமப்புற சுகாதார நிலையங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ள நாம், அதனை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என நினைத்தோம்.

அந்த அடிப்படையில்தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் உட்கட்டமைப்பு எற்படுத்துவதற்கான அனுமதி 2021-22ம் ஆண்டு 593 மையங்களுக்கும் 2022-23ம் ஆண்டு 115 மையங்களுக்கும் அளிக்கப்பட்டது. இதற்கான, கட்டடப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இதில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களிலும் 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 172 வகை முக்கியமான மருந்துகளும், 64 வகை அவசியமான ஆய்வக சேவைகளும் ஆண்டு முழுவதும் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் மூலம், நகர்ப்புற மக்களுக்கு, குறிப்பாக குடிசை வாழ் மற்றும் நலிந்த மக்களுக்கும் தரமான முறையில் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் துணை மையங்களாக செயல்படும். அனைத்து ஆரம்ப சுகாதார சேவைகளையும் மக்கள் எந்தவித பொருட்செலவின்றி அவர்களின் வசிப்பிடத்திற்கு பக்கத்திலேயே எளிதில் தடையின்றிப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் நவீனமயமாக வேண்டும். புதிய நோய்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக நமது மருத்துவர்கள் செயல்பட வேண்டும்.

மருத்துவ ஆராய்ச்சிகள் நிறைய நடக்க வேண்டும். மருத்துவர்கள் மட்டுமல்ல, மருத்துவ வல்லுநர்களையும் உருவாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் எப்படி ஏழை எளியோரின் நம்பிக்கையாக இருக்கிறதோ, அதை போலவே நகர்ப்புற நலவாழ்வு மையங்களும் செயல்பட வேண்டும். தற்போது, 500 மையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இது ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக் கொண்டே வரும் என்பதில் ஐயமில்லை. வாழ்விடத்துக்கு அருகிலேயே பள்ளிகள் இருப்பதைப் போல, அருகிலேயே மருத்துவமனைகள், நிரந்தர மருத்துவ மையங்கள் என்ற சூழலை நிச்சயமாக விரைவில் உருவாக்குவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியம், மேயர் பிரியா, எம்பிக்கள் தயாநிதிமாறன், தமிழச்சிதங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் எழிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நான் அண்மையில் ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்றேன். அதைக்கூட இங்கே இருக்கக்கூடிய எதிர்கட்சித் தலைவர் எப்படி விமர்சித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். முதலீட்டை ஈர்க்க போகவில்லை, முதலீடு செய்யப் போயிருக்கிறார் என்று சொல்கிறார் இது அவர் புத்தி. எனவே, அதைப்பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.

* 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு
நகர்ப்புற பகுதிகளில் முதற்கட்டமாக ரூ.125 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு தூய்மைப் பணியாளர் என 500 மருத்துவர்கள், 500 செவிலியர்கள், 500 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 500 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் இந்த மையம் செயல்படும். இம் மையங்களின் மூலம் இந்த பகுதியில் வாழும் 25,000 மக்கள் பயன்பெறுவர்.

You may also like

Leave a Comment

five − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi