பெங்களூரு: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் சின்னசாமி ஸ்டேடியத்தில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கை மாநில அரசு சிஐடி வசம் ஒப்படைத்த நிலையில், சிஐடி போலீசார் நேற்று சின்னசாமி ஸ்டேடியத்தில் சம்பவம் நடந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆர்சிபி அணி மற்றும் விழா ஏற்பாடுகளை செய்த டி.என்.ஏ நிறுவன நிர்வாகிகள் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.
ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலே, டி.என்.ஏ நிறுவன நிர்வாகிகள் சுனில் மேத்யூ, கிரண் மற்றும் சுமந்த் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்சிபி அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், டி.என்.ஏ நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தங்கள் மீது பதியப்பட்ட எப்.ஐ.ஆருக்கு எதிராக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீதான கட்டாய விசாரணைக்கு தடை விதித்தது.
இதற்கிடையே, இந்த வழக்கை மாநில அரசு சிஐடி போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், சிஐடி சிறப்புக் குழு நேற்று சின்னசாமி ஸ்டேடியத்தில் சம்பவம் நடந்த இடங்களில் நேரில் ஆய்வு செய்தனர். எஸ்பி ஷுபன்விதா தலைமையில் டிஎஸ்பி-க்கள் கவுதம் மற்றும் புருஷோத்தமன் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழு நேரில் ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர். இதுதொடர்பாக வேணு என்ற கல்லூரி மாணவர் அளித்த போலீஸ் புகார் அடிப்படையில் விரிவான விசாரணையை சிஐடி மேற்கொள்ளும். கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் கட்டாய விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால் அவர்களிடம் இப்போதைக்கு விசாரணை நடத்தப்படமாட்டாது என்றே தெரிகிறது.
* கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெய்ராம் ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். கிரிக்கெட் சங்க தலைவர் ரகுராம் பட்டிடம் இருவரும் ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.