காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள கலெக்டர் காலனி நடுநிலைப்பள்ளி எதிரில் தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காலனி நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் திருப்பருத்திக்குன்றம், காமாட்சியம்மன் காலனி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி முகப்பு பகுதியில் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடை இணைப்பு கால்வாயில் செல்லாமல் 15 நாட்களுக்கும் மேலாக சாலையில் தேங்கி நிற்கிறது. கழிவுநீரில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தி தரவேண்டும். பள்ளி வளாகம் எதிரில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. எனவே, பள்ளி எதிரில் தேங்கிநிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.