சென்னை: புவி கண்காணிப்பு செயற்கைகோள் இஒஎஸ்-8 ஆகஸ்டு 15ம் தேதிக்கு பதில் ஆக.16ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 ஆகிய விண்வெளி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது போன்ற பெரிய திட்டங்களை ஒரு பக்கம் செயல்படுத்தினாலும் வானிலை ஆராய்ச்சி, புவி கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக செயற்கைகோள்களை ஏவி வருகிறது.
அந்தவகையில் புவி கண்காணிப்பு செயற்கைகோளான இஒஎஸ்-8, எஸ்எஸ்எல்வி-டி3 சிறிய செயற்கைகோள் ஏவுதல் வாகனம் மூலம் ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ராக்கெட் ஆகஸ்டு 16ம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஒஎஸ்-8 செயற்கைகோளின் முதன்மை நோக்கம், மைக்ரோசாட்லைட்டை வடிவமைப்பது மற்றும் உருவாக்குவது, மைக்ரோசாட்லைட் பஸ்ஸுடன் இணக்கமான பேலோட் கருவிகளை உருவாக்குவது மற்றும் எதிர்காலத்தில் செயற்கைகோள்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை இணைப்பது ஆகியவை ஆகும்.
இஒஎஸ்-8 செயற்கைகோள் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோடு (இஒஐஆர்), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (ஜிஎன்எஸ்எஸ்-ஆர்) மற்றும் எஸ்ஐசி யுவி டோசிமீட்டர் ஆகிய மூன்று பேலோடுகளைக் கொண்டுள்ளது. இஒஐஆர் கருவி, செயற்கைகோள் அடிப்படையிலான கண்காணிப்பு, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவும் பகலும், மிட்-வேவ் ஐஆர் (எம்ஐஆர்) மற்றும் லாங்-வேவ் ஐஆர் (எல்விஐஆர்) பேண்டுகளில் படங்களை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. எரிமலை கண்காணிப்பு, தொழில்துறை, மின் நிலைய பேரிடர் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு இந்த செயற்கைகோள் உதவியாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.