புதுச்சேரி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் கடந்த மே மாதம் மினிலோடு கேரியரில் போலி மதுபாட்டில் கடத்தி வந்த புதுச்சேரி அரும்பார்த்தப்புரம் சக்திவேல் (42), ஆண்டியார்பாளையம் அண்ணாதுரை (46) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் புதுச்சேரி வில்லியனூர் அருகே உளவாய்க்கால் வெற்றிவேலன் நகரில் நடமாடும் போலி மதுபான தொழிற்சாலை இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த காலி மதுபாட்டில்கள், மூடிகள், போலி ஹாலோகிராம், போலி மதுபான ஸ்டிக்கர் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து கிரைம் போலீசார் உளவாய்க்கால் கிராமத்தில் சக்திவேலுவின் உறவினர் வீடு உள்ளதால் அவர்களுக்கும் போலி மது பாட்டில் தயாரிப்புக்கும் சம்பந்தம் உள்ளதா என விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், கடந்த ஓராண்டுக்கு முன் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளார். இவரது மகன் திலீபன் (35), சக்திவேலுவின் உறவினர் ரமேஷிடம் சென்று, நான் தமிழகத்தில் காவலராக உள்ேளன். இந்த வழக்கில் உங்களை சிக்க வைக்காமல் இருக்க ₹1 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ரமேஷ், நகைகளை அடகு வைத்து ₹90 ஆயிரம் கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன் மீண்டும் ரமேஷிடம் சென்று திலீபன் ₹15 லட்சம் ெகாடு, இல்லையென்றால் சாராய வழக்கில் சிக்க வைத்து விடுவேன். உங்கள் மானம் போய்விடும், உங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று மிரட்டியுள்ளார்.
இதனிடையே கிரைம் போலீசார், ரமேஷிடம் ரகசிய விசாரணை நடத்தியதில் தீலிபன் பணம் கேட்டு மிரட்டும் விஷயத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்த கடந்த 12ம் தேதி திலீபனை கிரைம் போலீசார் கைது செய்து வில்லியனூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், திலீபன் போலீசாக பணிபுரியவில்லை என்பதும், காவலர் சீருடை, போலி அடையாள அட்டையை வைத்து மிரட்டி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து திலீபன் மீது வில்லியனூர் போலீசார் மோசடி வழக்கு பதிந்து அவரிடமிருந்து தமிழக காவல்துறை சீருடை, போலி அடையாள அட்டை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நேற்று மாலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.