சென்னை: நீதிமன்றத்தில் இருந்து கைதிகளை சிறைக்கு அழைத்து செல்லும் போது, காவல் வாகனத்தில் மது அருந்திய பரங்கிமலை ஆயுதப்படை சிறப்பு எஸ்ஐ லிங்கேஸ்வரன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் லிங்கேஸ்வரன். முறையாக காவல் வாகனத்தில் பணி நிமித்தமாக செல்லும் போது அனைத்து காவலர்களும் சீருடையில் இருக்க வேண்டும். ஆனால் சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் சாதாரண உடையில் கைதிகளை ஏற்றி செல்லும் வாகனத்தில் சிறைக்கு சென்று வந்துள்ளார்.
அப்போது கைதிகளுக்கு அவர்கள் உறவினர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு பீடி, சிகரெட், குட்கா மற்றும் மது பாட்டில்களை ரகசியமாக அவர் விற்று வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் கைதிகளுக்கு ரகசியமாக வழங்க மது பாட்டிலை தனது பையில் சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் எடுத்து வந்துள்ளார். அதை காவலர் வாகனத்திலேயே அவர், சக காவலர்கள் முன்னிலையில் எந்தவித அச்சமுமின்றி மது பாட்டிலை திறந்து குடித்துள்ளார்.
இதை காவலர் வாகனத்தில் வந்த சக காவலர் ஒருவர் வீடியோ எடுத்து அதை காவலர் குழுவில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது போலீசார் மத்தியிலும், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பரங்கிமலை ஆயுதப்படை உயர் அதிகாரிகள் உடனே சம்பந்தப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரனை நேரில் அழைத்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரனிடம் ஆயுதப்படை உயர் அதிகாரிகள் வீடியோ ஆதாரங்களின்படி நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் பணியின் போது மது அருந்தியதும், கைதிகளின் உறவினர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மதுபாட்டில்கள் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் வழங்கியதும் உறுதியானது.
இதையடுத்து, பணியின் போது ஒழுங்கீனமாக செயல்பட்ட பரங்கிமலை ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அவரை சஸ்பெண்ட் செய்யவும் விசாரணை நடத்திய ஆயுதப்படை அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் அறிக்கை அளித்தனர். இதை தொடர்ந்து, லிங்கேஸ்வரன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் கைதிகளை சிறைக்கு அழைத்து செல்லும் போது காவலர் வாகனத்திலேயே மது அருந்திய சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.