செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலக முழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் தமிழ்ப்பேராயம் அமைக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தமிழ்பேராயம் விருதுகள் வழங்கும் விழா நேற்று எஸ்ஆர்எம் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்ப்பேராயம் தலைவர் முனைவர் கரு.நாகராசன், வரவேற்று பேசினார். மேலும், நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் நிறுவனரும், தமிழ்ப்பேராயம் நிறுவனவேந்தருமான டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் மற்றும் சிறப்பு விருந்தினரக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், கலந்து கொண்டு படைப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது என பல்வேறு தமிழ் அறிஞர்கள் பெயரில் 12 கவிஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மஹாராஷ்டிர மாநில ஆளுநர். சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘ஜப்பான் நாட்டில் ஜப்பான் மொழியில் மட்டுமே கல்வி கற்கிறார்கள், சீனம் பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக திகழ்ந்தாலும் சீன நாட்டிலும் அந்த மொழியிலேயே கற்கிறார்கள். தமிழகத்தை பொருத்தவரையில் தமிழை பற்றி அதிகம் பேசுகிறோம் உள்மனதில் ஆங்கிலம் மோகம் கொண்டவர்களாக தான் இருக்கிறோம்.
ஆங்கில கல்விதான் சிறந்தது என்கின்ற எண்ணம் மாற வேண்டும். தாய்மொழி கல்வி போற்றி பாதுக்காக வேண்டும். ஒரு மொழியை காக்க வேண்டும் என்று சொன்னால் தமிழ் வளர்ச்சிக்கு அத்தனை முயற்சிகளையும் செய்ய வேண்டும். நான் நமது தமிழ் போராயத்திற்கு வைக்கிற வேண்டுகோள் உலகம் முழுவது இருக்கின்ற தமிழர்களை ஒருங்கிணைக்கின்ற நிகழ்வாக மாற வேண்டும். ஒரு நாள் நீங்களே உலக தமிழர் மாநாட்டை நடத்த வேண்டும்.’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், எஸ்ஆர்எம் குழுமங்களின் ராமாபுரம், திருச்சி வளாகம் இணை தலைவர் நிரஞ்சன், பதிவாளர் முனைவர் பொன்னுசாமி, துணை வேந்தர் முனைவர் முத்தமிழ்ச் செல்வன் மற்றும் வளாக நிர்வாகி அருணாச்சலம் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக தமிழ்ப்பேராயம் செயலர் முனைவர் ஜெய்கணேஷ் நன்றி உரை நிகழ்த்தினார். கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.