*பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த மூன்று வருடங்களாக பருவ நிலைகள் மாறினாலும் தொடர்ச்சியாக குளங்கள் மற்றும் கண்மாய்கள் வற்றாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பருவநிலை மாற்றங்கள் காரணமாக கொளுத்தும் வெயில், கடுமையான மழை, கடும் குளிர் என காலநிலை மாறி மாறி வருகிறது.
கோடை காலத்தில் மழையும் மழைக்காலத்தில் வெயிலும் கொளுத்துகிறது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் முன்னதாகவே மழை பெய்தாலும் இரண்டு, மூன்று மாதங்கள் மழை தள்ளி பெய்தாலும் கண்மாய்கள் மற்றும் குளங்களில் கடந்த மூன்று வருட காலமாக தண்ணீர் வற்றாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகரை சேர்ந்த குட்டி என்பவர் கூறும்போது, பல ஆண்டுகளாக கோடை காலங்களில் குளங்கள் முழுமையாக வறண்டு போய் இருந்த காலம் உண்டு. ஆனால் தொடர்ச்சியாக மூன்றாண்டுகளாக கொளுத்தும் கோடை காலத்திலும் தண்ணீர் வற்றாமல் உள்ளதால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் பழைய மற்றும் புதிய குளங்கள், விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாயான வில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் சன்னதி கோயில் குளம், திருவில்லிபுத்தூர் திரு முக்குளம் ஆகியவை வற்றாமல் காட்சியளிக்கிறது. இதிலும் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலின் புதிய குளம் மற்றும் பழைய குளம் முழுமையான கொள்ளளவுடன் உள்ளது.
இதனால் பெரியகுளம் கண்மாயை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் தொடர்ச்சியாக தண்ணீர் வற்றாமல் தேங்கி இருப்பதால் நிலத்தடி நீரும் உயரம் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.