ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதுதொடர்பாக போர்மேன், உரிமையாளர் கைதாயினர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளபட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (62). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை, வில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ளது. இங்கு 60 அறைகள் உள்ளன. ஆலையை சிலர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர். 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று காலை 10.30 மணியளவில், பட்டாசு தயாரிக்க தேவையான மணி மருந்து உள்ளிட்ட கெமிக்கல் பொருட்கள் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்டன. இந்த பொருட்களை இறக்கி குடோனில் வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திடீரென மணி மருந்தில் உராய்வு ஏற்பட்டு, பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாகபாளையத்தை சேர்ந்த புள்ளகுட்டி (54), கார்த்தீஸ்வரன் (36) ஆகிய 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். சிவகாசி அருகே திருவேங்டபுரத்தைச் சேர்ந்த போஸ் (35), வடப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (31) ஆகிய இருவரும் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெடி விபத்தில் குடோன் மற்றும் சரக்கு வாகனம் எரிந்து நாசமானது. இதுதொடர்பாக மல்லி போலீசார் வழக்குப்பதிந்து, ஆலை உரிமையாளர் ஜெயராஜ், போர்மேன் பாலமுருகன் (40) ஆகியோரை கைது செய்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மல்லி உட்கடை மாயத்தேவன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை வெடி விபத்தில் புள்ளகுட்டி (65) மற்றும் ஈஸ்வரன் (35) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போஸ் (35) மற்றும் மணிகண்டன் (31) ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ₹50 ஆயிரமும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.