ஸ்ரீவில்லிபுத்தூர்: கோவிந்தா… கோபாலா கோஷம் முழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் மிக முக்கிய திருத்தலமாக இது போற்றப்படுகிறது. பட்டர்பிரான் கோதை, சூடி கொடுத்த சுடர்க்கொடி என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஆண்டாள் நாச்சியார், ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆண்டுதோறும் இந்த தினத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்தாண்டு ஆடிப்பூர திருவிழா, கடந்த ஜூலை 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை தினசரி பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளிய ஆண்டாள், பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் மதுரை அழகர்கோயில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மங்கல பொருட்கள் சீர்வரிசையாக நேற்று கொண்டு வரப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணியளவில் ஆண்டாள், ரெங்கமன்னார் கோயிலிலிருந்து சர்வ அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். தேரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 9.05 மணியளவில் கோபாலா… கோவிந்தா என பக்தர்களின் கோஷங்கள் முழங்க, பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. ரதவீதிகளில் பக்தர்கள் வெள்ளம் புடை சூழ சென்ற தேர், தெற்கு ரதவீதி மற்றும் கீழரத வீதி சந்திப்பில் நின்றது. பின்னர் காலை 11.30 மணியளவில் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் விருதுநகர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தின்போது பக்தர்களுக்கு குடிநீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விருதுநகர் எஸ்பி பெரோஸ்கான் உத்தரவின்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர ஊர்க்காவல் படை, என்.எஸ்.எஸ் மாணவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.