சென்னை: நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார் விஷால். இதனை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியது: ஹேமா கமிட்டி விவகாரம் பற்றி கேட்கிறீர்கள். நிச்சயம் யாராவது ஒரு பெண்ணை பயன்படுத்திக்கொள்ள பலர் முயற்சிப்பார்கள். இதை தவிர்க்க வேண்டுமென்றால், அந்த பெண்ணுக்கு மனதில் தைரியம் வேண்டும். அந்த பெண் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் வேலையை பார்க்காமல், பெண்கள் கையை பிடித்து இழுப்பதை என்ன சொல்வது. பைத்தியக்காரர்கள் போல் சில நடிகர்கள் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்க வேண்டும். சில நாட்களில் ஜாமின் கிடைத்து அவர்கள் வெளியே வாரக்கூடாது. தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயம் இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலும், நடிகர் சங்கம் சார்பில் ஹேமா கமிட்டியைப்போல குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யப்படும். ஸ்ரீரெட்டி என்மீது பாலியல் புகார் சொல்கிறார். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. ஆனால் அவரது சேட்டைகள் எனக்கு தெரியும்.
* விஷால் நல்லவர் போல் நடிக்கிறார்: நடிகை ஸ்ரீரெட்டி தாக்கு
சென்னை: நடிகர் விஷால் மீது நடிகை ஸ்ரீரெட்டி சில மாதங்களுக்கு முன் பாலியல் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் அது பற்றி நேற்று விஷாலிடம் நிருபர்கள் கேட்டபோது, ஸ்ரீரெட்டி யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அவரது சேட்டைகள் தெரியும் என்றார். இதுகுறித்து டிவிட்டரில் ஸ்ரீரெட்டி கூறும்போது, ‘மீடியாவின் முன் விஷால் யோக்கியமானவர் போல் நடிக்கிறார். அவர் எவ்வளவு பெரிய மோசடிக்காரர் என்பது எனக்கு தெரியும். அவர் நடிகைகளை யாராவது தொட்டால் செருப்பால் அடியுங்கள் என்கிறார். என்னிடம் நிறைய செருப்புகள் இருப்பதை விஷாலுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்’ என்றார்.
* பெண்கள் விஷயத்தில் அஜித், விஜய்க்கு முந்தைய நடிகர்கள் யோக்கியமா? – லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி
சென்னை: மலையாள திரை உலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில் தமிழ் சினிமாவிலும் இதுபோல நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று பலரும் பேசி வருகின்றனர். இதுபற்றி பேசியுள்ள இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், “இப்போதிருக்கும் நடிகர்களான விஜய், அஜித், கார்த்தி, சூர்யா போன்றவர்கள் தாங்கள் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதில்லை என தைரியமாக சொல்வார்கள். ஆனால் அதற்கு முந்தைய தலைமுறை நடிகர்களால் அப்படி வெளியே வந்து சொல்ல முடியுமா? நான் தனிப்பட்ட உறவுகளை பற்றி சொல்லவில்லை. வாய்ப்பு கொடுக்கிறேன் என்று பாலியல் ரீதியாக நடிகைகளை பயன்படுத்திக் கொண்டதை சொல்கிறேன். இந்தி சினிமாவில்தான் பெண்களை அவமானப்படுத்தும் விதமாக பாடல்களில் பாடியதற்காக அமிர்கான் இப்போது மன்னிப்புக் கேட்டுள்ளார். அதுபோல இப்போது தமிழ் நடிகர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கேட்பார்களா?’ எனக் கூறியுள்ளார்.
* தமிழ் நடிகை ரூபஸ்ரீக்கு பாலியல் தொல்லை: – நடிகை ஷகீலா பகீர் தகவல்
சென்னை: தமிழ் சினிமாவிலும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்னை இருக்கிறது என்று சில நடிகைகள் வெளிப்படையாக பேச தொடங்கி இருக்கிறார்கள். நடிகை ஷகிலா பேட்டி ஒன்றில் நடிகை ரூபஸ்ரீக்கு மலையாள சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது என் கண் முன்னே பிரச்னை ஏற்பட்டது என்று பேசி இருக்கிறார். ஷகிலா பேசுகையில், ‘மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் ரூபஸ்ரீ கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருந்தாங்க. அந்த படத்தில் நான் ஒரு சின்ன கேரக்டர் பண்ணி இருந்தேன். அப்போது ஒரு நாள் இரவு ரூபஸ்ரீ ஒரு ரூமில் தனியாக தங்கி இருந்தார். அதற்கு எதிர்த்த ரூமில் நானும் என்னுடைய தம்பியும் தங்கி இருந்தோம். அப்போது இரவு நேரத்தில் நான்கு பேர் குடித்துவிட்டு வந்து ரூபயின் ரூம் கதவை தட்டினார்கள். அந்த பொண்ணு பயந்து போய் கதவை திறக்க மாட்டேன் என்று கத்திக் கொண்டிருந்தாங்க. நாங்க போய் தான் அந்த நபர்களை விரட்டப் பார்த்தோம். அவர்கள் எங்களை அடித்தார்கள், நாங்களும் அவர்களை அடித்து துரத்தி அந்த பெண்ணை வேறு ஒரு டாக்ஸி புக் பண்ணி அனுப்பி வைத்தோம். இந்த மாதிரி அட்ஜஸ்மெண்ட் பிரச்னை வெளிப்படையாகவே நடக்கிறது’ என்று பேசி இருந்தார்.
இதுபற்றி நடிகை ரூபஸ்ரீ கூறியது: ஷகிலா சொல்வதில் சில விஷயங்கள் உண்மை இருக்கிறது. ஆனால் எல்லா விஷயங்களும் உண்மை இல்லை. நான் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தேன். அந்த திரைப்படத்தில் நடிகை ஷகிலாவும் ஒரு ரோலில் நடித்தார். எப்போதும் படப்பிடிப்புக்கு எங்க அப்பா என்னுடைய துணையாக வருவார்.ஆனால் அன்று அப்பா வரவில்லை. நான் தனியாக இருந்தேன். ஷூட்டிங் முடிவடைந்ததும் அடுத்த நாள் நான் இன்னொரு ஷூட்டிங் போக வேண்டும் என்று பட குழுவினரிடம் முதலில் சொல்லியிருந்தேன். அதற்கு வண்டி புக் பண்ணி தருமாறு அவர்களிடம் கேட்டிருந்தேன். முதலில் சரி என்று சொன்னவர்கள் பிறகு ரூமிற்கு வந்து முடியாது என்று பிரச்னை செய்தார்கள். அப்போது ஷகிலாவும் அவருடைய தம்பியும் தான் வந்து பிரச்னை செய்தவர்களிடம் பேசினார்கள். அதற்குப் பிறகு ஷகிலா எனக்கு டாக்ஸி புக் பண்ணி வேற ஷூட்டிங்கிற்கு அனுப்பி வைத்தார். ஷகிலா சொன்னது போல அது அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்னைக்காக நடக்கவில்லை. இவ்வாறு நடிகை ரூபஸ்ரீ கூறினார்.
* நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தது கோழைத்தனம்: – பார்வதி திருவோத்து சாடல்
சென்னை: பாலியல் விவகாரத்தை அடுத்து மலையாள நடிகர் சங்க அமைப்பான ‘அம்மா’ என்ற அமைப்பின் தலைவர் மோகன்லால் உள்பட 17 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இது கோழைத்தனமான செயல் என்று நடிகை பார்வதி திருவோத்து கடுமையாகச் சாடியிருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள், தங்கள் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்த செய்தியைக் கேட்டவுடன் எனக்கு முதலில் தோன்றிய விஷயம், இது எவ்வளவு கோழைத்தனமான செயல் என்பதுதான். ஊடகங்கள் முன்னிலையில் இந்த விவகாரத்தைப் பற்றி பேசும் பொறுப்பில் இருந்துகொண்டு, இப்படி திடீரென்று விலகிச்செல்வது என்பது மிகவும் கோழைத்தனமான செயல். இதுபோன்ற செயலால் உரையாடல்களையும், விவாதங்களையும் முன்னோக்கி எடுத்துச்செல்லும் பொறுப்பு பெண்களாகிய நம்மீது விழுகிறது. குறைந்தபட்சம் கேரள அரசுடன் இணைந்து ‘அம்மா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்தாலோசித்து, பிரச்னைகளுக்கு உரிய முறையில் தீர்வு கண்டிருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். அவரது கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.