திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்றிரவு உறியடி உற்சவம் நடக்கிறது.பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் 2 நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று துவங்கியது. இதையொட்டி காலை உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீபண்டார மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு திருமஞ்சனம், அலங்காரம் நடந்தது.
மாலை அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதைதொடர்ந்து 2ம் பிரகாரத்தில் உள்ள கிருஷ்ணர் சன்னதியில் இரவு கிருஷ்ணன் பிறப்பும், குழந்தைக்கு சங்கில் பால் கொடுப்பதை சித்தரிக்கும் சங்குப்பால் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து கிருஷ்ணன் புறப்பாடு நடந்தது. காலை 9 மணி முதல் கிருஷ்ணன், சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி சன்னதி வந்து சேர்ந்தார். மாலை 3 மணிக்கு திருச்சிவிகையில் கிருஷ்ணனுடன் நம்பெருமாள் புறப்பட்டு 4 மணிக்கு யாதவ உறியடி ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சேர்கிறார். பின்னர் இரவு 7 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்படுகிறார். இரவு 8.15 மணி முதல் சித்திரை வீதிகளில் பெருமாள் வலம் வந்ததும் உறியடி நிகழ்ச்சி நடக்கிறது. இதைதொடர்ந்து 9 மணிக்கு மூலஸ்தானத்துக்கு நம்ெபருமாள் செல்கிறார்.