சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய ராஜிவ் ஜோதி யாத்திரை டெல்லியை சென்றடைந்தது. அங்கு ராகுல்காந்தியிடம் ஜோதியை எம்.எஸ்.திரவியம் தலைமையிலான குழுவினர் ஒப்படைத்தனர். மறைந்த ராஜிவ் காந்தி புகழை பரப்பும் வகையில் தமிழகத்தில் இருந்து, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் ராஜிவ் ஜோதி யாத்திரை கடந்த 11ம்தேதி ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி நினைவிடத்தில் இருந்து தொடங்கியது.
இந்த யாத்திரையை, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, ஜோதியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, குண்டூர், விஜயவாடா, நிசாமாபாத், நாக்பூர், ஜபால்பூர், வாரணாசி, லக்ேனா, ரேபரேலி உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக யாத்திரை குழு சென்றது. இந்த யாத்திரையானது, 30 பேருடன் 5 வாகனங்களில் தரைவழி மார்க்கமாக பல மாநிலங்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு நேற்று முன்தினம் டெல்லியை சென்றடைந்தது.
அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராஜிவ்ஜோதியை வரவேற்று யாத்திரை குழுவினரை பாராட்டினர். அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம், யாத்திரை குழு தலைவர் எம்.எஸ்.திரவியம் ஜோதியை ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், தீர்த்தி, அப்பாஸ் மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், யாத்திரை குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.