சென்னை: நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், ரூ.44,125 கோடி முதலீட்டுக்கு 15 திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சந்தாக் நிறுவனத்திற்கு முதலீடாக ரூ.21,340 கோடியில் 1,114 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்ககூடிய திட்டம், காஞ்சிபுரத்தில் மெகஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம் ரூ.2,200 முதலீட்டில் 2,200 பேருக்கு வேலைவாய்ப்பு திட்டம், ஈரோட்டி மில்கி மிஸ்ட் உணவு பதப்படுத்துதல் தொழிலில் ரூ.1,777 கோடி முதலீட்டில் 2,025 பேருக்கு வேலைவாய்ப்பு திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோகன் கீரிம்டெக் நிறுவனத்தின் முதலீட்டில் ரூ.1,597 கோடியில் 715 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் இதில் அடங்கும்.
இதுமட்டுமல்லாது, உலகளாவிய திறன் மையங்களுக்கான அவற்றின் விரிவாக்கங்களுக்காக ஒப்புதலும் அமைச்சரவையில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், யு.பி.எஸ் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா இந்த இரண்டு நிறுவனங்கள் அவர்களது மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளன.
இதைவிட ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னெவென்றால், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் சார்பில் ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள வல்லம் படுகால் பகுதியில் ரூ.706 கோடியில் பாக்ஸ்கான் நிறுவனத்திற்காக 18,720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்கான கட்டிடத்தை வரும் 17ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.