ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக பொருத்தப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் சேதமடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னையில் இருந்து பெங்களூரூ செல்லும் வாகனங்கள், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னையில் இருந்து பெங்களூருக்கும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் வந்து செல்கின்றன. தற்போது, நான்கு வழி நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலிகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தன. இதனால், தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றன. குறிப்பாக, விபத்து ஏற்படும் இடங்களில் ஆங்காங்கே மேம்பாலங்கள் கட்டப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதிய தார்சாலை அமைக்கப்பட்ட இடங்களில் 20 அடி உயரத்தில் உயர்கோபுரம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவைகளில் பல மின் விளக்குகள் சேதமடைந்தும், சில மின் விளக்குகள் அந்தரத்தில் தொங்கியவாறு காட்சியளிக்கின்றன. அதேபோல, இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகனங்களை இயக்கி செல்வதற்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்து காணப்படும் மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.