* தமிழ்நாடு 2030க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக வளர்ச்சியடைய இலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: 2030க்குள், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று நான் ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்தியாவிலேயே முதன் முறையாக தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக சிப்காட் சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.706.50 கோடி செலவில் 18,720 படுக்கைகள் கொண்ட மெகா குடியிருப்பு வளாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வல்லம்- வடகால் கிராமத்தில் இந்த குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர். பெண் பணியாளர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார். முன்னதாக வளாகத்தில் மரக்கன்றினை நட்டார்.
இந்த வளாகம், 22.48 லட்சம் சதுர அடி பரப்பிலான இடத்தில் தரைத்தளம் மற்றும் 10 அடுக்குமாடி கட்டிடமாக 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 பிரிவுகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில், ஒவ்வொரு பிரிவிலும் 1,440 நபர்கள் தங்கும் வகையில் 240 அறைகள் அமைந்துள்ளது. இங்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில் துணை மின் நிலையம், நவீன தீயணைப்பு வசதிகள், உட்புறச் சாலைகள், தெருவிளக்குகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 3 மின் தூக்கிகள் என மொத்தம் 39 மின்தூக்கிகள் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் தலா ஒரு ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சமையலறை, உணவுக்கூடம், திறந்தவெளி பொழுதுபோக்கு மையத்துடன் கூடிய வண்ண மலர்செடிகள், மரங்கள், செயற்கை நீரூற்று அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. இந்தத் தங்கும் விடுதி கட்டிடமானது, ஃபாக்ஸ்கான் நிறுவனத்திலுள்ள பெண் பணியாளர்கள் தங்குவதற்காக ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள தைவான் நாட்டைச் சார்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனமானது சுமார் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் கைபேசி, நெட்வொர்க் சாதனங்கள், தனிக்கணினி இணைத்தல் மற்றும் உதிரிப் பாகங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற 41,000 பணியாளர்களில் 35,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உலகளாவிய நிறுவனமாக இருந்தாலும் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் சிறப்பான இந்தியச் செயல்பாடுகளுக்காக அதன் தலைவர் யாங் லீயு அவர்களுக்கு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காக, யாங் லீயுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இன்னும் பல சிறப்புகளை, பெருமைகளை பெற வேண்டும். அதற்காக வாழ்த்துகிறேன். தைவான் நாட்டைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான், உலகத்திலேயே மிகப்பெரிய மின்னணுவியல் உற்பத்தி நிறுவனம். உலகளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான உதிரி பாகங்களை பொருத்தி ஒருங்கிணைக்கும் நிறுவனம் இது.
12 நாடுகளில் தன்னுடைய உற்பத்தி நிறுவனங்களை அமைத்திருக்கிறது. இந்தக் குழுமம் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் இரண்டு உற்பத்தி அலகுகளை நிறுவி இருப்பது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை. இதற்காக ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 41 ஆயிரம் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள் என்றால் அதில் 35 ஆயிரம் பேர் பெண்கள். ஆணுக்கு பெண் சமம் என்பதை தாண்டி ஆண்களைவிட, கூடுதலான பெண் தொழிலாளர்கள் இருப்பதை பெண் எனும் பேராற்றலுக்குத் தரும் முக்கியத்துவமாகவே பார்க்கிறேன்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தையும்விட, தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது. அதாவது 42 விழுக்காடு என்ற அளவில் இருக்கிறது. அந்த வகையில், உங்கள் நிறுவனத்தின் சமத்துவ நோக்கத்தை பாராட்டுகிறேன். நிதி ஆயோக் அமைப்பின் 2023-24 ஆண்டுக்கான அறிக்கையின்படி, வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசில்லா எரிசக்தி ஆகிய குறியீடுகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றிருக்கிறது. பத்து குறியீடுகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 13 குறியீடுகளில் தமிழ்நாடு 11-ல் தேசிய சராசரியைவிட அதிக புள்ளிகள் பெற்றிருக்கிறது.
2023-24 ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.19 விழுக்காடு பங்களிப்போடு தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் என்ற நிலையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய மாநிலத்தில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கிறது. இதனால், உற்பத்தியும் அதிகம் செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பும் அதிகம் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தொழிற் பூங்காக்கள் இல்லாத மாவட்டங்களில், புதிதாக தொழிற் பூங்காக்கள் அமைக்க முடிவெடுத்தோம். அதேபோல், 45 ஆயிரம் ஏக்கர் நில வங்கி உருவாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தேன்.
இப்போது வரைக்கும், 41 ஆயிரம் ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டிருக்கிறது. அதனுடைய, சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் சிப்காட் நிலவங்கியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. சிப்காட் நிறுவனம் மூலம் இருங்காட்டுகோட்டை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருப்பூர் மாவட்டம், நெருப்பெரிச்சல் ஆகிய இடங்களில் மூன்று தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.
2030 ஆண்டுக்குள், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று நான் ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்பான செயல்பாடுகள், அந்த இலக்கை நாம் விரைவாக எட்டுவோம் என்று நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. அதற்கு ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சி.வி. கணேசன், தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் திரு. யாங் லீயு, எம்பிக்கள் டி.ஆர். பாலு, ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் கு.செல்வப்பெருந்தகை, இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய், இந்தியாவிற்கான தைவான் நாட்டு தூதர் பௌஷன் ஹேர், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநர் டி. சினேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.