ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி மூலமாக பிள்ளைப்பாக்கம், கடுவஞ்சேரி, வளத்தான்சேரி, தத்தனூர் உள்பட பல்வேறு கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக உள்ளது. மழை காலங்களில் பிள்ளைப்பாக்கம் ஏரி நிரம்பினால், அதன் உபரிநீர் ஏரியின் 3 கலங்கல் வழியாக, சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியை சென்றடையும்.
தற்போது கோடை காலம் என்பதால், பிள்ளைப்பாக்கம் ஏரியின் உபரிநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் இயங்கி வரும் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படாமல் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுநீர் ராட்சத பைப்புகள் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் உபரிநீர் கால்வாயில் நேரடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் உபரிநீர் கால்வாயில் கறுப்பு நிறத்துடன் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. பருவமழையின்போது இவை நேரடியாக செம்பரம்பாக்கம் ஏரியில் நேரடியாக கலக்கும் அவலநிலை உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிநீரும் மாசடையும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற ஏற்கெனவே சிப்காட் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
எனினும், இப்பகுதியை சேர்ந்த பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், இதுபோன்ற ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மாசடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, பிள்ளைப்பாக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் உபரிநீர் கால்வாய் மற்றும் பல்வேறு நீர்பிடிப்பு பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகளில் சுத்திகரிப்படாத கழிவுநீரை வெளியேற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும்.
வரும் மழைக் காலத்துக்குள் உபரிநீர் கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தடையின்றி உபரிநீர் செல்வதற்கு மாவட்ட பொதுப்பணி துறை அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.