ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவுநீரை, அனுமதியின்றி லாரிகள் மூலம் கொண்டு வந்து மழைநீர் கால்வாயில் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்குள்ள, பெரும்பாலான தொழிற்சாலைகளில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதில்லை. இதற்கு, மாறாக தொழிற்சாலையில் சேகரமாகும் கழிவுநீர் மற்றும் குடியிருப்பு வீடுகளில் இருந்து அகற்றப்படும் செப்டிக் டேங்க் கழிவுநீரை டேங்கர் லாரிகள் மூலம் அப்புறப்படுத்துகின்றன.
இதனால், அந்தந்த பகுதிகளில் கழிவுநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள், தனியார் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து லாரியில் எடுக்கப்படும் கழிவுநீரை கொண்டு வந்து சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாய் மற்றும் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக கொட்டுகின்றனர். இதனிடையே, பெரும்புதூர் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவுநீரை, லாரிகளின் மூலம் கொண்டு வந்து பென்னலூர் ஏரிக்கு செல்லும் கால்வாயில் திறந்து விடுகின்றனர்.
இதனால், கழிவுநீர் கால்வாய் வழியாக பென்னலூர் ஏரிக்குச்சென்று கலக்கிறது. இதனால், நீர்நிலைகள் பாதிக்கப்படுவதுடன், கால்நடைகள், பொதுமக்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடும் கழிவுநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மீது காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நம்பர் பிளேட் இல்லாத கழிவுநீர் லாரிகள்
பெரும்புதூர் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட கழிவுநீர் லாரிகள் உள்ளன. ஒருசில லாரி உரிமையாளர்கள், குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை சட்டவிரோதமாக ஏரி, குளம், கால்வாய் மற்றும் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். மேலும், இந்த வாகனங்களை மக்கள் அடையாளம் காணாமல் இருக்க பெரும்பாலான லாரிகளில் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது.