பெங்களூரு: உலகக்கோப்பையின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதியை உறுதி செய்துவிட்ட நிலையில், 4வது இடத்திற்கு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டி போடுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குஷல் பெரேரா 22 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதனால் இலங்கை அணி மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்கும் எனக் கருதப்பட்ட நிலையில், பெரேரா 51 ரன்களுக்கு அவுட் ஆனார்.
நிஷங்கா 2 ரன்களிலும், குஷல் மெண்டிஸ் 6 ரன்களிலும், சமரவிக்ரமா 1 ரன்னிலும், அசலங்கா 8 ரன்களிலும் வந்த வேகத்தில் வெளியேறினர். இறுதிக் கட்டத்தில் தீக்ஷனா, மதுஷங்கா ஆகியோர் சற்று தாக்குப்பிடித்தனர். இறுதியில், இலங்கை அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்தது.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே 45, ராசின் ரவீந்திரா 42, டேரில் மிட்செல் 43ஆகியோர் அபாரமாக விளையடி அசத்தினர். இறுதியில் நியூசிலாந்து அணி 23.2 ஓவர்கள் முடிவில் 172 ரன்களை குவித்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தி்ல் வெற்றியைப் பெற்றது.