கொழும்பு: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் பெல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி 29ம் தேதியும், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 6ம் தேதியும் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் பெல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இயன் பெல் 2004-2015 வரை இங்கிலாந்து அணியில் விளையாடி 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42.69 சராசரியுடன் 7727 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 22 சதங்கள் மற்றும் 46 அரைசதங்கள் அடித்துள்ளார்.
“அங்குள்ள நிலைமைகள் குறித்த முக்கிய நுண்ணறிவுகளுடன் வீரர்களுக்கு உதவ உள்ளூர் அறிவு கொண்ட ஒரு நபரை அழைத்து வர இயானை நியமித்தோம். இயன் பெல் இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் அதிகம், மேலும் அவரது பங்கு இந்த முக்கியமான சுற்றுப்பயணத்தில் எங்கள் அணிக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என இலங்கை அணியின் சிஇஓ ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியுடன் ஆகஸ்ட் 16 அன்று இயன் பெல் பணியாற்றத் தொடங்குவார். இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும், இலங்கை தற்போது தரவரிசையில் 4வது இடத்தில் உள்ளது, இங்கிலாந்து 6வது இடத்தில் உள்ளது.
இலங்கை அணி: தனஞ்சய டி சில்வா (c), திமுத் கருணாரத்னே, நிஷான் மதுஷ்கா, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (vc), ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித, கசுன் ராஜித நிசல தாரக, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வான்டர்சே, மிலன் ரத்நாயக்க