பெங்களூர்: உலக கோப்பை தொடரில் பெங்களூர் சின்னசாமி அரங்கில் நேற்று நடைபெற்ற 25வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதின. காயம் காரணமாக நாடு திரும்பியுள்ள டாப்லே, அட்கின்சன், புரூக் ஆகியோருக்கு பதிலாக வோக்ஸ், மொயீன், லிவிங்ஸ்டோன் ஆகியோர் நேற்று இங்கிலாந்தின் ஆடும் அணிக்கு திரும்பினர். இலங்கை அணியில் மதீஷாவுக்கு பதிலாக புதிதாக இணைந்துள்ள மேத்யூஸ் இடம் பிடித்தார். டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் நடுகளம் இறங்க, இலங்கை பந்து வீச்சை தொடங்கியது. மேத்யூ வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் கண்டம் தப்பிய பேர்ஸ்டோ, அதில் 3 ரன் சேர்த்தார். அதுதான் முதல் ஓவரில் கிடைத்த மொத்த ரன். அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரிகளும் கிடைத்தன. ரன் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் மாலனை 28ரன்னில் வெளியேற்றினர் மேத்யூ. அதன் பிறகு இலங்கை வேகப் பந்து வீச்சாளர்கள் நெருக்கடியை அதிகரிக்க ஜோ ரூட் 3, கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்த பேர்ஸ்டோ 30, கேப்டன் பட்லர் 8, லிவிங்ஸ்டோன் 1ரன்னில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அந்த நேரத்தில் இங்கிலாந்து 17ஓவரில் 5விக்கெட்களை இழந்து 85ரன் என பரிதாப நிலையில் நின்றது.
அதனால் தீக்ஷனா வீசிய 18வது ஓவர் மெய்டன் ஓவராகும் அளவுக்கு களத்தில் இருந்த ஸ்டோக்ஸ்-மொயீன் இணை பொறுமையாக விளையாட ஆரம்பித்தது. ஆனாலும் மொயீன் 15, வோக்ஸ் 0, ரஷீத் 2 ரன்னில் வெளியேற்றினர் இலங்கை வீரர்கள். பொறுப்புடன் விளையாடி அரை சதத்தை நெருங்கிய பென் ஸ்டோக்சையும் 43ரன்னில் ஆட்டமிழக்க செய்தார் லஹிரு. அடுத்த சில நிமிடங்களில் அடில் ரஷீத் 2, மார்க் வுட் 5 ரன்னில் வெளியேற இங்கிலாந்து 33.2ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 156ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் டேவிட் வில்லி 14ரன்னுடன் களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் லஹிரு 3, ரஜிதா, மேத்யூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். சுழல் தீக்ஷனா ஒரு விக்கெட் சாய்த்தார். அடுத்து இலங்கை அணி 50ஓவரில் 157ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்ட தொடங்கியது.
ஆனால் 2வது ஓவரிலேயே பெரேராவை 4ரன்னில் விரட்டினார் வில்லி. அடுத்த பந்தில் கேப்டன் மெண்டீசை வெளியேற்றும் வாய்ப்பை தவறவிட்டார் ரூட். ஆனால் 6வது ஓவரில் 11ரன் எடுத்திருந்த மெண்டிசை அவுட்டாக்கினார் வில்லி. அதனால் இங்கிலாந்து தரப்பில் நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் அதை தகர்ப்பதை போல் சமரவிக்ரமா-நிசாங்கா இணை பொறுப்புடன் விளையாட ஆரம்பித்தது. அடுத்ததடுத்து அரை சதத்தை கடந்த இருவரும். 25.4ஓவரில் இலக்கையும் கடந்தனர். அதனால் இலங்கை 2விக்கெட்களை இழந்து 160ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. பதும் நிசாங்கா 77, சமரவிக்ரமா 65ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை 4 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது. அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற பரிதாப நிலையில் உள்ளது.