அறந்தாங்கி: மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குள் சென்ற புதுகை மீனவர்கள் படகு மீது ரோந்து கப்பலை மோத விட்டு, மீன்பிடி உபகரணங்களை கடலில் வீசி, மீனவர்களை தாக்கி, இலங்கை ராணுவம் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 64 நாள் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த சசிவருணம், சேது, முனிராஜ், மகேந்திரன் ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர். இரவில் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 18 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பலை விசைப்படகு மீது மோதினர். மேலும் விசைப்படகை இலங்கை கடல் எல்லைக்கு இழுத்து சென்று வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பறித்து கடலில் வீசினர். மேலும் 4 மீனவர்களையும் தாக்கி விரட்டியடித்தனர். அவர்கள் தப்பி பிழைத்து தங்களது விசைப்படகில் கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு நேற்று காலை வந்து சக மீனவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், நமது எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் வந்து எங்களை தாக்கினர். மேலும் வலை உள்ளிட்ட உபகரணங்களை பறித்து கடலில் வீசினர். கப்பல் மோதியதில் சேதமடைந்த விசைப்படகை சீரமைக்க ரூ.3 லட்சம் வரை செலவாகும். இலங்கை கடற்படையினரின் தாக்குதலை நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.