சென்னை: இந்தாண்டில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் வைகோ எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் முரளீதரன் பதிலளித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக ஒன்றிய வெளி விவகாரத்துறை அமைச்சரிடம் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ எம்.பி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் கூறியதாவது: சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டில் இதுவரை 2 தாக்குதல்கள் நடத்தப்பட்டு, 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் உள்பட அரசாங்கம் உயர் மட்டத்தில் மீனவர்களின் பிரச்னைகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமான மற்றும் வாழ்வாதார பிரச்னையாகக் கருதுமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.