சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த 8 மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகில் மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் 26ம் தேதி (நேற்று முன்தினம்) கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 116 இந்திய மீனவர்களும், 184 படகுகளும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
மீனவர்கள் இதுபோன்று தொடர்ச்சியாக கைது செய்யப்படும் சம்பவங்கள், மீனவர்களின் குடும்பத்தினரிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்னைகளை மேலும் மோசமாக்கியுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பரப்பை அடிப்படையாக கொண்டுள்ளது. இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களை மட்டுமல்லாமல், அவர்களை நம்பி வாழும் குடும்பத்தினரின் நல்வாழ்வையும் பாதிக்கிறது என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன். எனவே, இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், இந்திய படகுகளையும் விரைவாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.