சென்னை:‘இலங்கை சினிமா ராணி’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா (78), நேற்று காலை மரணம் அடைந்தார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். கடந்த 60 வருடங்களாக 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், 1968ல் திஸ்ஸ லியன்சூரியாவின் ‘புஞ்சி பபா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் இலங்கை திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து பல விருதுகளை வென்று சாதனை படைத்தார். 2010ல் ஆசியாவின் 25 சிறந்த திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.
1978ல் இந்திய-இலங்கை கூட்டுத்தயாரிப்பில் உருவான ‘பைலட் பிரேம்நாத்’ என்ற தமிழ் படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக நடித்த மாலினி பொன்சேகா, மேலும் ‘யார் அவள்’, ‘மல்லிகை மோகினி’, ‘பனி மலர்’ ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். 2010ல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச்சடங்குகள், வரும் திங்களன்று சுதந்திர சதுக்கம் கலாசார விவகார அமைச்சகத்தில் இலங்கை அரசு மரியாதையுடன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.