திருச்சுழி: இலங்கையில் நடைபெற்ற மலையக தமிழர்கள் விழாவில் பங்கேற்க முடியாமல் போனதற்கு ஒன்றிய அரசு தான் காரணம் என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மல்லாங்கிணற்றில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை தலைநகரான கொழும்புவில் கடந்த 2ம் தேதி மலையக தமிழர்கள் தோட்டப் பணிகளில் தங்களது உழைப்பை கொடுத்த நாட்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வருக்கு பதிலாக அரசு பிரதிநிதியாக என்னை கலந்துகொள்ள சொல்லியிருந்தார். இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்களுக்கும் முறைப்படி தெரிவித்தோம்.
இலங்கை பயணம் மேற்கொள்வதற்காக ஒன்றிய அரசின் வெளிவிவகார துறையில் இருந்து உரிய அனுமதி பெறுவதற்கு கடந்த மாதம் 28ம் தேதி உரிய வழிமுறைப்படி விண்ணப்பம் பொதுத்துறையால் அனுப்பப்பட்டுவிட்டது. அதற்கு பிறகு விழா ஏற்பாட்டாளர்களிடம் நான் தொடர்பு கொண்டு எனது பயண விவரங்கள் எல்லாம் அவர்களுக்கு அளித்து பயணத்திற்கு வேண்டிய விமான டிக்கெட்டுகள் எல்லாம் ஏற்பாடுகளை செய்துவிட்டு, வெளிவிவகாரத்தின் அனுமதி கிடைப்பதற்காக காத்துக் கொண்டிருந்தேன். 28ம் தேதி பொதுத்துறையின் வாயிலாக ஒன்றிய அரசிற்கு அனுப்பப்பட்டது. விழா 2ம் தேதி மதியம். ஆனால் 1ம் தேதி இரவு ஒன்பது மணிவரை அதற்கான அனுமதி ஒன்றிய அரசின் வெளிவிவகார துறையிடம் இருந்து வரவில்லை.
நான் அன்றைய தினம் ஏறத்தாழ எட்டு, எட்டரை மணிவரை தலைமை செயலகத்தில் தான் இருந்தேன். தலைமை செயலகத்தில் இருக்கக்கூடிய அதிகாரியிடத்தில் அதற்கான ஒப்புதல் வந்துவிட்டதா என்று விசாரித்தபோது இதுவரை வரவில்லை என்று தெரிவித்தார். அதற்குப்பிறகு நான் அதிகாரிகளிடத்தில் கேட்டு, இதற்கு பிறகு அத்தகைய அனுமதி கடிதம் வருவது கடினம் என்ற சூழ்நிலையில், அதற்கு பின்பு இலங்கையில் இருக்கக்கூடிய விழா ஏற்பாட்டாளர்களை அழைத்து, சூழ்நிலையை அவர்களிடத்தில் விளக்கி, ஒன்றிய அரசிடம் இருந்து அனுமதி இதுவரை வராத காரணத்தால் நான் பயணத்தை மேற்கொள்ள இயலாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி, என்னுடைய பயண ஏற்பாடுகளை நான் ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினேன். அதற்கு பிறகு ஒன்பதரை மணிக்கு மேல் அனுமதி வந்திருக்கிறது.
2ம் தேதி காலை சுமார் 11 மணிக்கு இலங்கையில் இருந்து முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு இதுபோல தமிழ்நாடு அமைச்சரும் வர இயலாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினால் தமிழ்நாடு முதல்வர் வாழ்த்துச் செய்தி அனுப்பிட வேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். சுமார் 11 மணிக்கு செய்தி கிடைத்தவுடன் பல்வேறு அலுவல்களுக்கிடையே, இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை கருதி உடனடியாக முதல்வர் நேரம் ஒதுக்கி அதற்கான வாழ்த்துச் செய்தியும் உடனடியாக தயார் செய்து அங்கு அனுப்பி வைத்துவிட்டார். அந்த வாழ்த்துச் செய்தி இங்கிருந்து பகல் 2 மணிக்குள் அவர்களுக்கு கிடைத்துவிட்டது.
அவர்கள் நம்மிடத்தில் தெரிவித்தது நிகழ்ச்சியில் முதல்வருடைய வாழ்த்துச் செய்தி ஒளிபரப்பப்படும் என்று சொன்னார்கள். அங்கே இருக்கக்கூடிய பல்வேறு செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு அது அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் என்னவாயிற்றது என்றால், என்ன காரணத்தினாலோ முதல்வருடைய வாழ்த்துச் செய்தி அந்த கூட்டத்தில் அவர்களால் ஒளிபரப்பப்படவில்லை. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்தும், இந்திய அளவிலும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால் என்ன காரணத்தினால் முதல்வருடைய வாழ்த்துச் செய்தி அங்கே ஒளிபரப்ப இயலவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. யாரையும் நான் நேரடியாக சொல்லவிரும்பவில்லை. காரணத்தை உங்களுடைய யூகத்திற்கு விட்டுவிடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.