Wednesday, September 18, 2024
Home » இலங்கை நீதிமன்றத்தால் தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை நீதிமன்றத்தால் தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

by Karthik Yash

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் நேற்று எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஆழமாக பாதிக்கும் கவலைக்குரிய விஷயத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள முதல்வர், தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பல தலைமுறைகளாக வாழ்வாதாரமாக திகழ்வதாகவும், மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டு மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜூலை 21ம் தேதி படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 12 தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் கடந்த 3ம் தேதி ரூ.1.5 கோடி அபராதம் விதித்ததாகவும், இது ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதுடன் அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இலங்கை வசம் உள்ள மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர்களை தாயகத்திற்குத் திரும்பி அழைத்து வரவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment

14 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi