கொழும்பு: இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயக வெற்றி பெற்றார். தொடர்ந்து இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கை தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இதையொட்டி தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கூறுகையில்,‘‘ நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 13,314 வாக்கு மையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடக்கும். இந்த தேர்தலுக்காக வாக்கு பெட்டிகள் மற்றும் இதர உபகரணங்கள் ஏற்கனவே அந்தந்த வாக்கு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார். நாடாளுமன்ற தேர்தலுக்காக போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த 90 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் உள்ள 2 கோடி 10 லட்சம் மக்கள் கொண்ட இலங்கையில் 1.7 கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதில் மேற்கு மாகாணத்தில் இருந்து தான் அதிகபட்சமாக 19 எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அந்த மாகாணத்துக்கு உட்பட்ட கொழும்புவில் இருந்து 18 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கிழக்கு மாகாணம், திரிகோணமலை மாவட்டத்தில் இருந்து குறைவான அளவில் 4 எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 1977 முதல் எம்பியாக இருந்து வந்த முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அதே போல் ராஜபட்சே சகோதரர்களான மகிந்தா,கோத்தபய,சாமல் மற்றும் பேசில் ஆகியோர் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளனர்.
வாக்கு பதிவு முடிந்ததும் இன்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும். இந்த தேர்தல் மூலம் இலங்கையின் புதிய பிரதமர் யார்? என்பது தெரிந்துவிடும். 113 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்ற கட்சி தான் புதிய அரசை அமைக்க முடியும். நாடாளுமன்றத்தில் அரசுக்கு மெஜாரிட்டி கிடைத்தால் அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனவே, அதிபர் அனுர குமார திசநாயகவின் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.