ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்று நடுக்கடலில் வீசப்பட்ட ரூ.3.30 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். இலங்கையில் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி அருகே மன்னார் வளைகுடா கடற்பகுதியில், அந்நாட்டு கடற்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு படகை துரத்திச் சென்றபோது, படகில் இருந்தவர்கள், ஒரு பார்சலை கடலுக்குள் போட்டு விட்டு தப்பிச் சென்றனர். கடற்படையில் உள்ள நீச்சல் வீரர்கள் நீண்ட நேரம் தேடி பார்சலை எடுத்தனர்.
அதனை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ 740 கிராம் தங்கக்கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.3 கோடியே 30 லட்சம் ஆகும். விசாரணையில் கடத்தல் தங்கம் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. மேலும் கடத்தலுக்கு பயன்பட்ட பைபர் படகை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றிய கடத்தல் தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தப்பி சென்ற கடத்தல்காரர்களை இலங்கை கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தங்கம் யாருக்கு கடத்தி வரப்பட்டது என ஒன்றிய, மாநில புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.