கொழும்பு: இலங்கை சிறையில் இருந்த மேலும் 38 தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். நேற்று 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில் 38 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 14, 28 ஆகிய தேதிகளில் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்ற மீனவர்கள் 38 பேரை தலைமன்னார் – நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். 5 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் பின்னர் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களின் சிறை காவல் முடிந்து 38 மீனவர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட இலங்கையின் மன்னார் நீதிமன்ற நீதிபதி 38 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் மீண்டும் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.விடுதலை செய்யப்பட்ட 38 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 67 தமிழக மீனவர்கள் கைதாகி இலங்கை சிறையில் வைக்கப்பட்ட நிலையில், நேற்று 4 பேரும், இன்று 38 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.