சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும், மீனவர்கள் பிரச்னைகளைக் கையாள்வதில், இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 29ம் தேதி இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுடன், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் சிறை பிடித்துள்ளனர். இத்தகைய கைது நடவடிக்கைகள், படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும், நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய, உடனடியாக தலையிட வேண்டும்.
வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து, மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், நமது மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளனர். மீன்பிடி தொடர்பான பிரச்னைகளைக் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.