மான்செஸ்டர்: இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 74 ஓவரில் 236 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டிசில்வா 74, மிலன் ரத்நாயக்கே 72 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ரன் எடுத்திருந்தது.
2வது நாளான நேற்று பென் டக்கெட் 18, டான் லாரன்ஸ் 30, ஒல்லி போப் 6 ரன்னில் அவுட் ஆக ஜோ ரூட் 42, ஹாரி புரூக் 56 ரன் எடுத்தனர். கிறிஸ் வோக்ஸ் தனது பங்கிற்கு 25 ரன் எடுத்து போல்டானார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன் எடுத்திருந்தது. ஜேமி ஸ்மித் 72, கஸ் அட்கின்சன் 4 ரன்னில் களத்தில் இருந்தனர். கைவசம் 4 விக்கெட் இருக்க இலங்கையை விட 23 ரன் அதிகம் பெற்றுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.