ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று காலை இலங்கை நபர் ஒருவர் இருப்பதாக தனுஷ்கோடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவா(40) என்பது தெரியவந்தது. மேலும் கொலைக் குற்றவாளியான சிவா மீது யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதும், நேற்று முன்தினம் இரவு தலைமன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு தப்பி வந்ததும், விசாரணையில் தெரியவந்தது. இவரை இலங்கை படகோட்டிகள் நேற்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இறக்கி விட்டு சென்ற நிலையில் போலீசாரிடம் சிக்கியுள்ளார். சிவாவை பிடித்து சென்ற போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.