தண்டையார்பேட்டை: சென்னை வந்த தொழிலதிபர் கடத்தப்பட்டதாக இலங்கையில் இருந்து அவரது மகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், என்னுடைய தந்தை வியாபார விஷயமாக சென்னைக்கு கடந்த 11ம்தேதி சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை யாரோ கடத்திவிட்டனர். கடத்தியவர்கள் எங்களிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். எனவே, தந்தையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி வடக்கு கடற்கரை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. வடக்கு கடற்கரை ஆய்வாளர் ராஜாசிங், உதவி ஆய்வாளர் பிரேம்குமார் மற்றும் போலீசார் இதுகுறித்து நடத்திய விசாரணையில், இலங்கையை சேர்ந்த துணி வியாபாரியான முகமதுசாம் (48) என்பவர் கடந்த 11ம்தேதி சென்னை மண்ணடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அன்றிரவு விடுதியை காலி செய்துள்ளார். அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது 12ம்தேதி கோயம்பேடு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் அவரது செல்போன் சிக்னல் கிடைத்தது தெரியவந்துள்ளது.
தொழில் போட்டி காரணமாக அவரை யாராவது கடத்தினார்களா? பணம் பறிக்க கடத்தப்பட்டாரா? அல்லது வேறுஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மண்ணடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.