காலே: வங்கதேச கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. வங்கதேசம் – இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, கடந்த 17ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 495 ரன் குவித்தது. கேப்டன் நஜ்முல் ஹொசேன் ஷான்டோ (148 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (163 ரன்) சதம் விளாசினர். பின்னர் ஆடிய இலங்கை அணியின் துவக்க வீரர் பதும் நிஸங்கா 187 ரன் குவித்ததால், அந்த அணி 484 ரன் சேர்த்தது.
அதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய வங்கதேசம் கடைசி நாளான நேற்று, 6 விக்கெட் இழப்புக்கு 285 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் நஜ்முல் இந்த இன்னிங்சிலும் 125 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதையடுத்து, 296 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி 2வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 4 விக்கெட்இழந்து 72 ரன் எடுத்தது. அதனால், போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக, இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய வங்கதேச கேப்டன் நஜ்முல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டியுடன் இலங்கை நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மாத்யூஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.