காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் துறை சார்பில், ‘வலுவான எதிர்காலத்திற்கான தொழில்முறை படிப்புகள்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார். தாளாளர் அரங்கநாதன், தலைவர் ஜெயக்குமார், செயலாளர் வீரராகவன், பொருளாளர் மல்லிகா மாதவன், காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறை தலைவர் மனோகரன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன், சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி, கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை நங்கநல்லூர் இந்திய சார்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் நிறுவனத்தின் (ஐசிஏ) சீனியர் அலுவலர் சுந்தரவரதன் கலந்துகொண்டு, ‘வலுவான எதிர் காலத்திற்கான தொழில்முறை படிப்புகள்’ எனும் தலைப்பில் மாணவர்களுக்கு, பிகாம் டிகிரி படிப்புடன் நிறுத்திவிடாமல், சிஏ போன்ற வேலைவாய்ப்பு அளிக்கும் படிப்பில் சேர்ந்து பயனடைய வழிமுறைகள், பலவகையான வேலைவாய்ப்பு அமைவிடங்கள் குறித்து ஒளித்திரை வழியாக விளக்கமளித்து பேசினார்.
வணிகவியல் துறை தலைவர் காஞ்சனா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் பிரகாஷ், பேராசிரியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.