சென்னை: தனது மனைவியை கூடுதல் டிஜிபி ஒருவருடன் இணைத்து பேசிய நிலையில் தவெக நிர்வாகியும் யூடியூபரான ஸ்ரீவிஷ்ணுகுமாரை அவரது மனைவி ஒப்பனை கலைஞர் அஸ்மிதா அளித்த புகாரின் படி மதுரவாயல் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் ஸ்ரீவிஷ்ணு குமார் என்பவர் வசித்து வருகிறார். பிரபல யூடியூபரான இவர், தற்போது தவெக வில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் நண்பர் ஒருவரின் தங்கைக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உல்லாசத்திற்கு அழைத்ததாக அவரது நண்பர்கள் சிலர் ஸ்ரீவிஷ்ணுகுமாரை பார்ட்டிக்கு அழைத்து இளம் பெண்ணுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை காட்டி உதைத்து கண்டித்த வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து யூடியூபரான தவெக நிர்வாகி ஸ்ரீவிஷ்ணுகுமார் கடந்த ஏப்ரல் 23ம் தேதி தன்னை கடத்தி ரூ.1 கோடி பணம் கேட்டு தாக்கிய நபர்கள் மீது புகார் அளித்தார். அதேபோல் நாங்கள் யாரையும் கடத்த வில்லை என்றும், விஷ்ணுகுமார் ஐபோனை அவரது மனைவி அஸ்மிதா தான் அனைத்து பாஸ்வேர்டு மற்றும் இன்ஸ்டாகிராம் முகப்பு பக்கங்களை மாற்றினார். இதற்கும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று புகார் அளித்தனர். இந்த இரண்டு புகார்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தவெக நிர்வாகியான ஸ்ரீவிஷ்ணுகுமார் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது மனைவி அஸ்மிதா மீது புகார் அளிக்க வேண்டாம் என்று எங்கள் வீட்டின் எதிரே குடியிருக்கும் கூடுதல் டிஜிபி ஒருவர் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும், அதன்படி அவர் மீது புகார் அளிக்கவில்லை என்றும், தனது மனைவிக்கும் கூடுதல் டிஜிபிக்கும் இடையே நட்பு உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் ஸ்ரீவிஸ்ணுகுமார் மனைவி ஒப்பனை கலைஞரான அஸ்மிதா மதுரவாயில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் எனது கணவர் தன்னை திருமணம் ெசய்து நம்பிக்கை மோசடி செய்துவிட்டார். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. எனது சொத்துக்களை அபகரிக்கும் வகையில் மிரட்டியும் தாக்கியும் வருகிறார். எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் அவதூறு கருத்துக்களை பொது வெளியில் தெரிவித்து வருகிறார். எனவே ஸ்ரீவிஷ்ணுகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் படி மதுரவாயல் அனைத்து மகளிர் போலீசார் ஒப்பனை கலைஞரான அஸ்மிதா கொடுத்த புகாரின் மீது விசாரணை நடத்தினர்.
அதில் ஸ்ரீவிஷ்ணு குமார் அவதூறாக பேசி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து தவெகு நிர்வாகியான ஸ்ரீவிஷ்ணுகுமார் மீது நம்பிக்கை மோசடி, தாக்குதல், மானபங்கம் படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.