ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை, ஐந்து படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இரவில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கை கடற்படை கப்பலில் ரோந்து வந்த அந்நாட்டு கடற்படையினர் மீன்பிடித்து கொண்டிருந்த படகுகளை வழிமறித்து நிறுத்தி விரட்டியடித்தனர். மேலும் அப்பகுதியில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த பேச்சிமுத்து, ராமகிருஷ்ணன், கிப்ரோத், மெக்கன்ஸ், மரியசியா ஆகியோருக்கு சொந்தமான 5 விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படகுகளை நடுக்கடலில் நிறுத்தி வைத்து மீனவர்களிடம் நீண்ட நேரம் விசாரணை செய்தனர். பின்னர் கடற்படை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி 5 படகுகளில் இருந்த ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மீனவர்கள் 37 பேரை கைது செய்து இரவோடு இரவாக தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையே, இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையை அறிந்து, அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பிற படகுகள் அங்கிருந்து வேறு கடல் பகுதிக்கு சென்று மீன்பிடித்தனர். நேற்று காலை மீனவர்கள் ராமேஸ்வரம் துறைமுகம் திரும்பினர். கரை திரும்பிய மீனவர்களின் படகுகளில் மீன்பாடு மிகவும் சுமாராகவே இருந்தது. ‘‘10 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்வரத்து இருக்கும் என்று ஆர்வத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றோம். ஆனால் இலங்கை கடற்படையினரின் அடாவடி செயல்பாடுகளால் குறைந்தளவு மீன்களுடன் திரும்பியுள்ளோம்’’ என கரைதிரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
சிறையில் உள்ள மீனவர்களுக்கு நவ. 9 வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் பெரும்பாலான மீனவர்கள் பத்து நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். ஆர்ப்பாட்டம், போராட்டத்திலும் ஈடுபட்டனர். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இலங்கை தூதரகத்தின் முன்பு மீனவர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்திலும் மீனவர்கள் பங்கேற்றனர். நவ. 3ம் தேதி மண்டபத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். தற்போது மேலும் 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 10 விசைப்படகுகளுடன், 64 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* இன்று முதல் தொடர் வேலைநிறுத்தம்
37மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவத்தையடுத்து, ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீனவர்களின் அவசரக் கூட்டம் சேசுராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், இலங்கை சிறையில் உள்ள மற்றும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 64 மீனவர்களையும், 10 படகுகளையும் விடுவிக்க ஒன்றிய அரசு துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று முதல் (அக். 30) தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் செய்வதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நவ. 3ம் தேதி மண்டபத்தில் ரயில் மறியல் போராட்டம், 6ம் தேதி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.